புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் ஏற்பட்ட இரண்டு தீச்சம்பவங்களின் தொடர்பில் மேற்கொள்ளப்படும் காவல்துறையின் விசாரணையில் இளையர் ஒருவர் உதவிவருகிறார்.
இது குறித்த கேள்விகளுக்குக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) பதிலளித்தன.
ஜூலை 15ஆம் தேதி இரவு மணி 8.10க்கு ஜெலபாங் ரோட்டில் உள்ள புளோக் 501ல் நடந்த தீச்சம்பவங்கள் குறித்துத் தகவல் கிடைத்ததாக அவை தெரிவித்தன.
10ஆம் தளத்தில் உள்ள பொது நடைபாதையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனம் சம்பந்தப்பட்டிருந்தது. குடிமைத் தற்காப்புப் படைத் தண்ணீரைக் கொண்டு நெருப்பை அணைத்தது.
அதே புளோக்கில் இன்னொரு தீச்சம்பவம். நான்காம் தளத்தின் பொது நடைபாதையில் சைக்கிள் உறையில் தீ மூண்டது. பொதுமக்கள் அதனை அணைத்தனர்.
புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மூவர் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
இந்தத் தீச்சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுவதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதேவேளையில், தீ வைத்துச் சேதம் விளைவித்ததாக இளைஞர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.
விசாரணைகள் தொடர்கின்றன.
10ஆம் தளத்தில் உள்ள பொது நடைபாதையின் சுவர்களும் கூரைப்பகுதிகளும் புகையால் கறுப்பாகிவிட்டன என்றும் கருகிய வாசனையை உணரமுடிந்தது என்றும் சீனச் செய்தி ஊடகமான சாவ்பாவ் தெரிவித்தது.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா வியாழக்கிழமை இரவு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை நேரில் சென்று சந்தித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் அங்கு மூன்று தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
அந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயமில்லை. இது ஏதேனும் குறும்புத்தனம் அல்லது சதிச்செயலாக இருக்குமோ என்று குடியிருப்பாளர்கள் கவலைப்படுவதாகத் திரு சியா சொன்னார்.
குடிமக்கள், சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் நடவடிக்கைகளை அடித்தள அமைப்புகளின் தலைவர்கள் முடுக்கிவிடுவர் என்று அவர் கூறினார். விசாரணைகள் முடியும்வரை, காவல்துறையினரின் சுற்றுக்காவல் பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என்றார் திரு சியா.

