குவீன் ஸ்திரீட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றில் காப்பிக் கடையில் வியாழக்கிழமை (மார்ச் 19) தீ மூண்டதால் அதன் குடியிருப்பாளர்கள் 20 மணிநேரத்துக்கும் மேலாக மின்தடையை எதிர்நோக்க நேரிட்டது.
குவீன் ஸ்திரீட் புளோக் 269Bல் வியாழக்கிழமை நண்பகலிலிருந்து மின்தடை ஏற்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் வயதான தம்பதியின் மகளான 35 வயது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் உள்ள காப்பிக் கடையில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தீ மூண்டது. புகையை சுவாசித்ததன் காரணமாக ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 20 பேர் புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜாலான் பசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, “இன்று காப்பிக் கடையில் மூண்ட தீயினால் நீங்கள் மின்தடையை எதிர்நோக்குகிறீர்கள். நகர மன்றம் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று வியாழக்கிழமை இரவு 8.32 மணிக்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். உதவி தேவைப்பட்டால் குவீன் ஸ்திரீட் புளோக் 271ல் அமைந்துள்ள வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பை நாடுமாறும் அவர் அறிவுரை வழங்கினார்.
மின்தடை குறித்து தகவல் தெரிவித்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. மின்தடையால் புளோக்கில் 200க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குடியிருப்பாளர்கள் பலர் காற்றோட்டத்துக்காக கதவுகள், சன்னல்களைத் திறந்து வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
80 வயதைத் தாண்டிய தனது பெற்றோர் இருட்டில் நடமாட வேண்டியிருந்தது குறித்து கவலைகொண்ட அவர், அதிகாரிகள் தக்க நேரத்தில் போதுமான தகவல்களை அளிக்காததை எண்ணிக் கோபப்பட்டார். வியாழக்கிழமை பெற்றோர் வீட்டுக்கு வந்த தொண்டூழியர்கள் அவர்களுக்கு சிறிய விளக்கு ஒன்றைக் கொடுத்ததாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் குறிப்பிட்டார்.
அத்தியாவசியச் சேவைகளுக்கான கோளாறுகளைச் சரிசெய்யும் பிரிவைப் பலமுறை தொடர்புகொண்ட அவர், திருவாட்டி புவாவையும் தொடர்புகொண்டார். மின்சார விநியோகத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை நகர மன்றம் எடுத்து வருவதாக திருவாட்டி புவா கூறியிருக்கிறார்.
வியாழக்கிழமை நள்ளிரவிலும் மின்தடை தொடர்ந்ததால் அவர் தமது பெற்றோரை உட்லண்ட்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக நோன்புப் பெருநாள் காலத்தில் தனது மூன்று சகோதரர்களுடன் அவர் பெற்றோரைச் சந்திப்பதுண்டு. இவ்வாண்டு நோன்புப் பெருநாள் சனிக்கிழமை (மார்ச் 21) வருகிறது. அதனால் இம்முறை திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

