சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செப்டம்பர் 24ஆம் தேதி தீ மூண்டது.
இதில் மூதாட்டி ஒருவர் மாண்டார்.
692A சுவா சூ காங் கிரசெண்ட்டில் உள்ள ஒரு வீடு தீப்பற்றி எரிவதாகக் காலை 6 மணி அளவில் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்துக்கும் உட்லண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
“ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் வரவேற்பு அறையிலும் படுக்கையறையிலும் தீ மூண்டது. தீயணைப்புப் படையினர் வீட்டின் கதவை உடைத்து, வீட்டிற்குள் விரைந்து தீயை அணைத்தனர். கடும் வெப்பத்தாலும் புகையின் காரணத்தாலும் வீடு சேதமடைந்தது,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டில் உள்ள படுக்கையறை ஒன்றில் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைத் தீயணைப்பாளர்கள் வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டடத்தில் வசிக்கும் ஏறத்தாழ 150 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது அந்தக் கட்டடத்துக்கு அருகில் குறைந்தது எட்டு காவல்துறை கார்கள், மூன்று தீயணைப்பு வண்டிகள், ஒரு ‘ரெட் ரைனோ’ வாகனம் ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
தேவையான உதவிகளைப் புரிய நகர மன்ற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் செல்வர் என்று வடமேற்கு வட்டாரத்தின் மேயர் திரு அலெக்ஸ் யாம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
2024ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீச்சம்பவங்களில் இதுவரை எட்டு பேர் மாண்டுவிட்டனர்.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மூன்றாக இருந்தது.

