கிளெமெண்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இரவு ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தீயணைப்பாளர்கள் இருவர் உட்பட மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதுகுறித்துச் சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. வெள்ளிக்கிழமை இரவு மணி 11.10க்கு கிளெமெண்டி அவென்யூ 4ல் உள்ள புளோக் 309ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக அது தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, எட்டாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் நெருப்பு எரிந்துகொண்டிருப்பதைக் கண்டனர். வரவேற்பறையில் இருந்த பொருள்களைச் சூழ்ந்திருந்த தீயை அணைக்க, அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது.
தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்கள் தீயை அணைத்தனர்.
சமையலறையில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பணியின்போது தீக்காயங்கள் ஏற்பட்ட தீயணைப்பாளர்கள் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 80ஆக இருந்த அது கடந்த ஆண்டில் 94க்குக் கூடியது. குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட அதன் வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்த தீ விபத்துகளின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்தது. 2024ல் 1,990ஆக இருந்த அது, போன ஆண்டில் 2,050க்குக் கூடியது.

