தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பொதுமக்கள் உதவும்படி வேண்டுகோள்

தீ விபத்தில் நூலிழையில் தப்பித்த மகன்; நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தந்தை

4 mins read
13486ea5-d4dc-4016-936a-dfc9efe77161
மார்சிலிங் ரோடு புளோக் நான்கின் 13வது மாடியிலுள்ள மருத்துவ உதவி வாகன ஓட்டுநர் முனியாண்டி தங்கவேலுவின் வீட்டில் மின் சைக்கிள் புதன்கிழமை (ஜூலை 30) தீப்பிழம்பானது. வீடு கருகி சேதமடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம், தற்காலிகமாக அதே வட்டாரத்திலுள்ள வேறொரு இடத்தில் தங்கியுள்ளது. - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 2

மார்சிலிங் வட்டாரத்திலுள்ள தம் வீட்டில் மாலை 5 மணி வாக்கில் இளைப்பாறிக்கொண்டிருந்த 26 வயது சுரேந்திரன் முனியாண்டி, வரவேற்பு அறையில் மின்னேற்றம் செய்துகொண்டிருந்த நடமாட்டச் சாதனத்தில் தீப்பொறிகளைக் கண்டார்.

உயிருக்கான பயம், சுரேந்திரனின் உள்ளத்தை அப்போது கவ்வியது. 

சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறி அடுக்குமாடிக் கட்டடப் படிகளுக்கு விரைந்த சில நொடிகளில் மின் சாதனம் தீப்பிழம்பாக வெடித்தது.

அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ள வேறு எவரும் வீட்டில் இல்லை. 

மருத்துவமனை வாகன ஓட்டுநரான சுரேந்திரனின் தந்தை முனியாண்டி தங்கவேலு, வீடு தீப்பற்றியதைத் தொலைபேசி மூலம் அறிந்தபோது நிலைகுலைந்ததாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார். 

அந்த வீட்டில் தங்கும் மனைவி, மற்றொரு மகன், மருமகள், பேரப்பிள்ளை ஆகியோர் சம்பவம் நடந்த நேரத்தில், உறவினர் ஒருவரது வீட்டில் இருந்ததாக 55 வயது திரு முனியாண்டி குறிப்பிட்டார்.

ஜூலை 30ல் மார்சிலிங் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதை அடுத்து மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

உதவி கேட்டு, மாலை 5.50 மணி அளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

13வது மாடியில் உள்ள அந்த வீட்டின் வரவேற்பு அறையும் படுக்கையறையும் தீப்பிடித்திருந்தன. 

நீர் பீய்ச்சியடிக்கப்பட்ட பின்னர் தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இத்தகைய கருவிகளையோ மின்கலன்களையோ அளவுக்கு அதிக நேரம் மின்னேற்றம் செய்யவேண்டாம் என சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது. 

தோ பாயோ அடுக்குமாடி வீட்டில் தீச்சம்பவம் நடந்த மறுநாள், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மின்சைக்கிள் தீப்பிழம்பான சம்பவத்தால் 3,000 வெள்ளிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
மின்சைக்கிள் தீப்பிழம்பான சம்பவத்தால் 3,000 வெள்ளிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. - படம்: செய்யது இப்ராகிம்

சோகம் கலந்த நன்றியுணர்வு

தீ விபத்தினால் மூவாயிரம் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ரொக்கமும் ஆபரணங்களும் பொருள்களும் சேதமடைந்தன.

வாடகை வீட்டில் தங்கும், குறைந்த வருமானம் சம்பாதிக்கும் தம் குடும்பத்திற்கு இது பெரிய தொகை என்று திரு முனியாண்டி கூறினார்.

“இயன்றவரை எங்களுக்கு உதவி செய்ய நாங்கள் பொதுமக்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

நடந்ததில் பெருஞ்சோகம் ஏற்பட்டுள்ளபோதும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்ற நன்றியுணர்வுடன் திரு முனியாண்டி இருக்கிறார். 

‘‘இந்த வெடிப்புச் சம்பவம் நடந்திருந்தபோது நான் என் சமையலறையில் இருந்திருந்தால்கூட இந்நேரம் இறந்திருப்பேன்,’’ என்று அவர் கூறினார்.

குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். இயன்றவரை எங்களுக்கு உதவி செய்ய நாங்கள் பொதுமக்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
முனியாண்டி தங்கவேலு, 55

வீட்டைவிட்டு ஓட முடிவு செய்த சுரேந்திரன், நல்லவேளையாக மின்சாரத்தை நிறுத்த முற்படவில்லை என்று திரு முனியாண்டி நினைத்து பெருமூச்சுவிட்டார். 

தீ விபத்தின்போது பெருமளவு புகையை உள்வாங்கிய சுரேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மனத்தளவில் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சுரேந்திரனை தமிழ் முரசு பேட்டி காண அவரது குடும்பம் அனுமதிக்கவில்லை. 

வெடித்த அந்த மின்சைக்கிளை ஒரு மாத்திற்கு முன்புதான் வாங்கியதாக திரு முனியாண்டி கூறினார்.

‘‘உரிமையாளர் நானாக இருந்தபோதும் வேறு வேலை கிடைக்கும்வரை கிராப் உணவு விநியோகம் செய்ய விரும்பிய என் மகனுக்காக நான் அதனை வாங்கினேன்,’’ என்று அவர் கூறினார்.

மின்சைக்கிளை அதிக நேரத்திற்கு மின்னேற்றம் செய்யவில்லை என்று தெரிவித்த திரு முனியாண்டி, மின்னேற்றம் முழுமையாகச் செய்யப்படவில்லை என்று சைக்கிள் காட்டியதால் சிறிது நேரம்தான் மின்னேற்றம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஒன்றுகூடி துணைநிற்கும் சமூகம்

தீச்சம்பவம் நடந்த வீட்டில் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோருடன் சன்லவ் பராமரிப்பு நிலையத்தினர் இருந்து உதவி செய்தனர். 
தீச்சம்பவம் நடந்த வீட்டில் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோருடன் சன்லவ் பராமரிப்பு நிலையத்தினர் இருந்து உதவி செய்தனர்.  - படம்: சன்லவ் இல்லம்

10 மாதக் குழந்தை உட்பட மொத்தம் நான்கு பேர் கொண்டுள்ள அந்த குடும்பத்தினருக்கு, அதே வட்டாரத்தில் புளோக் மூன்றிலுள்ள சன்லவ் பராமரிப்பு இல்லத்தினர் உதவி அளித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு அணையாடை (diaper), பால், உணவுப்பொருள்கள், அரிசி சமைக்கும் குக்கர் உள்ளிட்ட அடிப்படை பொருள்களைத் தந்து தங்கள் அமைப்பினர் உதவியதாக சன்லவ் இல்லத்தின் தலைமை திட்ட அதிகாரி கே ராஜமோகன் தெரிவித்தார்.

தற்காலிகத் தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டவரை குடும்பத்தினர் சன்லவ் நிலையத்தில் இளைப்பாறியதாகவும் திரு ராஜமோகன் கூறினார்.

இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாக வசிப்போர் கட்டமைப்பு நிலையங்களிலும் கழக வீடுகளிலும் தங்கி வருவதாக மார்சிலிங் யூடி-குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகமது, ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்சிலிங் அடித்தளக் குழுக்கள் துணைநிற்பதாகக் கூறிய திரு ஸாக்கி, வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் அவசர நிவாரண நிதியம் வழியாக அவர்களுக்கு உடனடி உதவி வழங்கப்படுவதாகக் கூறினார்.

இந்நிலையில், திரு முனியாண்டியின் குடும்பத்திற்கு ஆதரவு நல்க மற்ற சமூக அமைப்புகளுடன் முனைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

“குறிப்பாக, அந்தக் குடும்பத்தின் குழந்தைக்கு உதவும் வகையில் உடனடி நிதியுதவியும் பொருளுதவியும் எங்கள் ஆதரவில் உள்ளடங்கும்.  

“சிண்டா குடும்பச் சேவை நிலையத்தைச் சேர்ந்த நம் சமூக ஊழியர்களும் அந்தக் குடும்பத்தைச் சந்தித்து அவர்களது தேவைகளை மேலும் அறிந்து அதற்கேற்ற வகையில் ஆதரவு வழங்க முற்படுகின்றனர். உதவி தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்குத் துணைநிற்பதில் சிண்டா கடப்பாடு கொண்டுள்ளது,” என்று அந்த அமைப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்