ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் தீ; 35 பேர் வெளியேற்றம்

1 mins read
9ebfba9d-71fe-47cb-a94a-11cb6289bd49
எண் 305, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள வீட்டில் ஜனவரி 5ஆம் தேதி தீ மூண்டது. - படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள தரை வீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து கிட்டத்தட்ட 35 பேர் வெளியேற்றப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

எண் 305 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள அந்த மூன்று மாடி வீட்டில் தீ மூண்டது குறித்து சனிக்கிழமை பின்னிரவு 12.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

காலாங், பாயா லேபார் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினர் சென்றபோது, காலியாக இருந்த வீட்டின் முதல் தளம் தீயால் சூழப்பட்டிருந்ததாகவும் மேல்தளங்களுக்கும் தீ பரவியதாகவும் கூறப்பட்டது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தியதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. வீட்டின் மேல்தளங்கள் தீ, புகையால் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்