செங்காங் வீவக குடியிருப்புப் பகுதியில் தீயணைப்பு வாகனம் ஒன்று, புல்வெளியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆராய்ந்து வருகிறது.
இம்மாதம் 24ஆம் தேதி ஆங்கர்வேல்கிரசெண்ட், புளோக் 338க்கு அருகே பிற்பகலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்தச் சமயத்தில் புளோக் 338ல் வழக்கமான தீ பாதுகாப்பு சோதனைகளை முடித்துகொண்டு தீயணைப்பாளர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் 3.50 மணியளவில் தீயணைப்பு வாகனம் சேற்றில் சிக்கியதாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அதன் அதிகாரிகள் வாகனத்தின் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து செயல்பட்டு வாகனத்தை வெளியே கொண்டுவந்தனர். பின்னர் வாகனம், தீயணைப்பு நிலையத்திற்கு ஓட்டிச் செல்லப்பட்டது.
இந்த விவகாரத்தில் அதன் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாக குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று, தீயணைப்பு வாகனம் ஒன்று சேற்றில் ஆழமாக சிக்கியிருந்ததைக் காட்டியது.
தீயணைப்பு வாகனத்தின் சக்கரங்கள் சேற்றில் சிக்குவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பு 2025, ஏப்ரல் 9ஆம் தேதி தெங்கா வீவக பகுதியில் ஒரு தீயணைப்பு வாகனத்தின் முன்புறச் சக்கரங்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட பாதையில் சிக்கிக்கொண்டன. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதன் பின்னர், குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள், வாகன ஒப்பந்தக்காரருடன் இணைந்து வாகனத்தை வெளியே கொண்டு வந்து, தீயணைப்பு நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
