சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளை ஏற்றிசென்ற தீயணைப்பு வாகனம் சுங்கை காடுட்டில் வியாழக்கிழமை (ஜனவரி 23) விபத்துக்குள்ளானது.
லாரியுடனும் மற்றொரு கனரக வாகனத்துடனும் தீயணைப்பு வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.
சுங்கை காடுட் ஸ்திரீட் 1ல் நடந்த இவ்விபத்து குறித்து தங்களுக்கு ஜனவரி 23ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.
வாகனங்களுடன் மோதியதால் பலத்த சேதமடைந்த தீயணைப்பு வாகனத்தை ‘Singapore Roads Accident.com’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில் பார்க்க முடிந்தது.
அந்தக் காணொளியில் வேறு இரு தீயணைப்பு வாகனங்களையும் மருத்துவ அவசர உதவி வாகனத்தையும் விபத்து நடந்த இடத்திற்கு அருகே காண முடிந்தது.
சுங்கை காடுட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திடத்திற்குச் சுங்கை காடுட் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சென்றது.
அந்தத் தகவல் பொய்யானது எனத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் அலுவலகம் திருப்பினர். அப்போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தீயணைப்பு வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அதிகாரியை மீட்புக் கருவி பயன்படுத்தி மீட்டதாகவும் அவரையும் மற்றொரு அதிகாரியையும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் சொல்லப்பட்டது.
மற்ற இரு அதிகாரிகளும் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு அழைத்துசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த அதிகாரிகள் அனைவரும் 21 வயதிற்கும் 28 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது சுயநினைவுடன் இருந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விசாரணை தொடர்கிறது.