செம்பவாங் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் மின்தேக்கி (power bank) வெடித்தது காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நவம்பர் 21ஆம் தேதி காலையில் செம்பவாங் கிரசென்டிலுள்ள புளாக் 362ஏயின் மூன்றாவது மாடிக் குடியிருப்பில் தீ மூண்டு சன்னல் வழியாக புகை வெளிவருவதைக் காண்பிக்கும் சில காணொளிகளும் படங்களும் சமூகத் தளங்களில் வலம் வருகின்றன.
‘ஸ்டாம்ப்’ கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காலை 8.15 மணியளவில் இந்தத் தீ விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறியது.
வீட்டின் படுக்கையறைக்குள் இருந்த பொருள்கள் சிலவற்றைத் தீ பற்றியதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர், நீரைக் குழாய் வழியே பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
குடிமைத் தற்காப்புப் படையினரும் காவல்துறையினரும் அந்தக் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து சுமார் 50 குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.
புகையை அதிகமாக உள்வாங்கிய இரண்டு பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினார்.
பழுதான மின்தேக்கிக்குக் மின்னூட்டம் செய்யப்பட்டது தீச்சம்பவத்திற்குக் காரணம் என்று அந்த இருவரும் கூறியதாக அண்டை வீட்டுக்காரர் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

