பூன் லே வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் வியாழக்கிழமை (ஜூலை 24) தீச்சம்பவம் ஏற்பட்டது.
அதை அணைக்கும் போது தீயணைப்பு வீரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீச்சம்பவம் பூன் லே டிரைவில் உள்ள புளோக் 197Dயின் ஐந்தாவது தளத்தில் இருக்கும் வீட்டில் ஏற்பட்டது. அதுகுறித்து தங்களுக்கு மாலை 6.20 மணி வாக்கில் தகவல் வந்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டின் சமையல் அறையில் ஏற்பட்ட தீயை நீர் பீச்சிகள் கொண்டு அணைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
“தீயணைப்பின்போது ஒரு தீயணைப்பு வீரருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்தனர், அதன் பின்னர் அவர் இங் தெங் ஃபோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,” என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தற்போது அந்த வீரர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சமையல் அறையில் சமைக்கும் போது கவனக்குறைவாக நடந்துகொண்டதால் தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.