புக்கிட் பாத்தோக் தரைவீட்டில் தீச்சம்பவம்

புக்கிட் பாத்தோக் தரைவீட்டில் தீச்சம்பவம்

படம்: ஷின்மின்

23 Jul 2026 - 7:37 pm

1 mins read

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள தரைவீடு ஒன்றின் பின்புறத்தில் புதன்கிழமை (ஜூலை 22) இரவு தீச்சம்பவம் நிகழ்ந்தது.

பெவிலியன் சர்க்கிள் பகுதியில் அமைந்த வீட்டில் இரவு 10.20 மணியளவில் தீ பரவியதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள், நீர் பீய்ச்சியடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீப்பிழம்பு வீட்டின் மூன்றாவது மாடி வரை எழும்பியது. அந்தச் சம்பவத்தில் வீட்டின் கூரை, சன்னல் சட்டங்கள் மற்றும் சமையலறை கடுமையாகச் சேதமடைந்தன.

புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். தீச்சம்பவத்துக்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவ இடத்தில் ஆறு குடிமைத் தற்காப்புப் படை வாகனங்களும் மூன்று காவல்துறை வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சாலைகள் குறைந்தது மூன்று மணி நேரம் மூடப்பட்டன.

பாதிக்கப்பட்ட வீட்டில் ஆறு பேர் வசிக்கின்றனர். சமையலறையில் சமையல் நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இல்லப் பணிப்பெண் எச்சரித்ததைத் தொடர்ந்து அனைவரும் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறினர்.

அந்தத் தீச்சம்பவத்தால் அண்டை வீட்டின் சுவர்கள், உட்கூரை ஆகியவை சேதமடைந்தன. அதனால், அக்குடும்பத்தினர் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்