மின்சைக்கிளால் தீச்சம்பவம்; குடியிருப்புக் கட்டடத்திலிருந்து ஐவர் வெளியேற்றம்

மின்சைக்கிளால் தீச்சம்பவம்; குடியிருப்புக் கட்டடத்திலிருந்து ஐவர் வெளியேற்றம்

படங்கள்: காய் யின்சோ/ ஃபேஸ்புக்

22 Jun 2026 - 5:36 pm

1 mins read

கேலாங் வட்டாரத்தில் உள்ள தனியார் கூட்டுரிமை வீடு ஒன்றில் மின்சைக்கிள் ஒன்று மின்னூட்டம் செய்துகொண்டிருந்தபோது தீச்சம்பவத்தை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மின்சைக்கிள் மின்னூட்டம் செய்யப்படும் போது அது யார் கவனிப்பும் இல்லாமல் இருந்ததால் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மாலை 5.35 மணிவாக்கில் 9 லோரோங் கேலாங் 26 என்ற முகவரியில் ஏற்பட்டது. கூகல் வரைபடத்தில் அது ‘காசா ஏரட்டா’ (Casa Aerata) கூட்டுரிமை வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கூட்டுரிமை குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில், கவனிக்கப்படாமல் மின்னூட்டம் செய்யப்பட்ட மின்சைக்கிளின் மின்கலன் மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மின்சைக்கிளில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்