மூன்று வயது சிறுமி உட்பட நான்கு பேரின் உயிரைப் பறித்த தீச்சம்பவம் தொடர்பாக ஆடவர் ஒருவர் மீது புதன்கிழமை (ஜனவரி 14) குற்றம் சாட்டப்பட்டது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் புளோக் 409 பிடோக் அவென்யூ 2ல் தீ மூண்டது.
நான்காவது மாடியில் இருந்த வீட்டில் தீ மூண்டதற்கு 60 வயது இத்னின் ஹுடி காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
வீட்டின் வரவேற்பறையில் இருந்த அட்டைப் பெட்டி மீது அவர் பற்றவைக்கப்பட்ட சிகரெட்டை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதை அவர் அகற்ற மறந்து வீட்டைவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீடு தீப்பிடித்துக்கொண்டது.
தீச்சம்பவம் காரணமாக வீட்டின் உரிமையாளரான 56 வயது ஐலீன் சான், வீட்டில் வாடகைக்கு இருந்த மலேசியரான 35 வயது டான் சூன் கியோங், அவரது மூன்று வயது மகள் டான் ஹுயி என், குவே போ யூ ஆகியோர் மாண்டனர்.
திருவாட்டி குவே போ யூ, திரு டானுக்கும் அவரது மகளுக்கும் எவ்வகையில் சொந்தம் என்று தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்தைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தீயணைப்பாளர்களும் அடைந்தபோது திருவாட்டி சானின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு டான் தமது மனைவி மற்றும் மகளுடன் சுயநினைவின்றி கிடந்தார்.
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தந்தையும் மகளும் மரணம் அடைந்தனர்.
புகையைச் சுவாசித்ததால் அவர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு டானின் மனைவி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சுயநினைவின்றி படுத்த படுக்கையாக இருப்பதாக 2023ஆம் ஆண்டில் காவல்துறை விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்தான் திருவாட்டி குவே போ யூவாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதுபற்றி தெரிந்துகொள்ள காவல்துறையுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
இத்னின் தொடர்பான வழக்கு பிப்ரவரி 11ல் மீண்டும் விசாரிக்கப்படும்.

