ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (மே 5) அதிகாலை தீச்சம்பவம் ஏற்பட்டது.
தீச்சம்பவம் காரணமாக அக்கட்டடத்திற்கு அருகே உள்ள சில வர்த்தகங்களும் சேவைகளும் மின்சார விநியோகத்தில் சிக்கலை எதிர்நோக்கின.
ஹவ்காங் அவென்யூ 1ல் உள்ள புளோக் 106ல் அதிகாலை 4.50 மணிவாக்கில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
“காப்பிக் கடையில் இருந்த மற்ற சில கடைகளும் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டன,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயை இரண்டு நீர் பீச்சிகள் கொண்டு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்பே பாதுகாப்புக் காரணம் கருதி கிட்டத்தட்ட 40 பேர் புளோக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஐந்து பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீச்சம்பவத்தால் காப்பிக் கடை மோசமாகப் பாதிக்கப்பட்டது. அது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

