மரினா பே சேண்ட்ஸ் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தீச்சம்பவம் ஒன்று ஏற்பட்டது. பற்றவைப்பு (வெல்டிங்) வேலையின்போது தீ ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தங்களுக்குப் பிற்பகல் 3.40 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கட்டடத்தின் மூன்றாவது டவரில் உள்ள 55வது மாடியில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதனைத் தீயணைப்புக் கருவிமூலம் ஹோட்டல் ஊழியர் அணைத்தார். தீ ஒரு நெகிழி விரிப்பில் ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
“ஹோட்டலில் சிறிய தீச்சம்பவம் ஏற்பட்டது. தீ ஏற்பட்ட பகுதியில் ஹோட்டல் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. விசாரணை நடந்து வருகிறது,” என்று மரினா பே சேண்ட்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தீச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் மரினா பே சேண்ட்ஸ் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து கரும்புகை வெளியாவதைப் பார்க்க முடிந்தது.

