சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தீச்சம்பவம் நேர்ந்தது.
தீத்தொடர்பாகக் காலை 9.05 மணிவாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது, அரும்பொருளகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தீயினால் அரும்பொருளக காட்சிப்பொருள்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. யாரும் காயமடையவில்லை.
தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரும்பொருளகம் கட்டம்கட்டமாக திறக்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். அரும்பொருளகத்தின் சிறு அலுவலகப் பகுதியில் தீச்சம்பவம் ஏற்பட்டது, அது உடனடியாக அணைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
“தற்போது நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம், விரைவில் கலைக்கூடத்தை முழுமையாகத் திறக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார் பேச்சாளர்.
பார்வையாளர்கள், அரும்பொருளக ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது அதற்குத்தான் முன்னுரிமை என்றார் அவர்.
மதிய நேரத்திற்குப் பிறகு அரும்பொருளகத்தின் சில பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டன. புதன்கிழமை (செப்டம்பர் 10) சில பகுதிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) காலைத் திட்டமிடப்பட்டிருந்த சில கலைப் படைப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
இரவு 8 மணிக்கு நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
செயிண்ட் ஆண்ருஸ் ரோட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் 60,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. 530 மில்லியன் வெள்ளி செலவில் புத்துயிர் ஊட்டப்பட்ட அந்தக் கட்டடம் 2015ஆம் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் சிங்கப்பூரின் நவீனக் காலப் படைப்புகள் பல இடம்பெற்றுள்ளன.

