தெம்பனிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
தீயால் ஏற்பட்ட கரும்புகையைச் சுவாசித்த இரு ஆடவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீச்சம்பவம் தெம்பனிஸ் ஸ்திரீட் 41ல் உள்ள புளோக் 422ல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) நிகழ்ந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரவு 11.45 மணிவாக்கில் தீச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து 80 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் நான்காம் தளத்தில் அமைந்துள்ள அந்த வீட்டின் படுக்கை அறையில் தீ மூண்டதாகவும் அது மின்சாதனம் ஒன்றின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
வீட்டில் ஆளில்லாதபோது மின்சாதனங்களை வெகுநேரம் மின்னூட்டம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல் தரமான மின்னூட்டப் பொருள்களையும் சாதனங்களையும் வாங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.