ஜாலான் பகாகியாவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடொன்றில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 50 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆறாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) தீ மூண்டது. தீயணைப்பாளர்கள் இரவு சுமார் 9.30 மணிக்கு அங்கு சென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நள்ளிரவுக்குப் பிறகு தகவல் அளித்தது.
படுக்கையறையில் மூண்ட தீயை அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சி அணைத்தனர். வீட்டின் எஞ்சிய பகுதி கடும் வெப்பத்தாலும் புகையாலும் சேதமுற்றதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு எவரும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
படுக்கையறையில் இருந்த மின்சாதனத்தால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சக்தி இணைப்புகளில் பல சாதனங்களைப் பொருத்தக்கூடாது என்றும் பயன்படுத்தாத கருவிகளை அவற்றிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்ட பிறகு சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார். உதவி தேவைப்பட்டோருக்குக் கைகொடுக்கக் குடியிருப்பாளர் தொடர்பு நிலையம் திறந்திருந்ததாக அவர் சொன்னார்.