மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை ஜாலான் காயுவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கில் உள்ள மின்விநியோகச் சாதனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அன்று காலை 7.30 மணிக்கு ஜாலான் காயு, புளோக் 447Aல் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
ஏழாவது மாடியின் பொது நடைபாதையில் உள்ள ஒரு மின் விநியோகச் சாதனத்துக்குள் இருந்த பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் குழாய் மூலம் தண்ணீரையும், தீ அணைப்பானில் உள்ள உலர்தூளைக் கொண்டும் தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் சுமார் 10 பேரை அங்கிருந்து வெளியேற்றினர். புகையை உள்ளிழுத்ததற்காக இரண்டு பேர் பரிசோதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்தால் ஏழாவது மாடியில் உள்ள ஆறு வீடுகளின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ஷின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டில் வசிப்பவர், மார்ச் 15 அன்று இரவு 9 மணியளவில் தனது மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொகுதி அமைந்துள்ள பேட்டையில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகளின் பொதுவான பகுதிகளை மேற்பார்வையிடும் அங் மோ கியோ நகர மன்றத்தின் செய்தித் தொடர்பாளர், “பொதுவான நடைபாதையை மீட்டெடுப்பதற்கான பழுதுபார்க்கும் பணிகள், மின் கம்பிவடங்கள், மீண்டும் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவை தொடங்கப்பட்டு விட்டன,” என்று கூறினார்.
அங் மோ கியோ குழுத்தொகுதியில் ஃபெர்ன்வேல் தொகுதியைப் பிரதிநிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தமது ஆதரவை வழங்க சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
தீச் சம்பவம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

