ஹவ்காங்கில் உள்ள பார்க் வில்லாஸ் கிரீன் பகுதியில் இருக்கும் தரை வீடு ஒன்றில் சனிக்கிழமை (அக்டோபர் 3) மாலை தீவிபத்து ஏற்பட்டது.
அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர், சம்பவம் நடந்த அன்று மாலை 6.30 மணியளவில் வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாக ‘ஏசியாஒன்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
மூன்று மாடிகள் கொண்ட அவ்வீட்டின் முதல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டதாகவும் அது மளமளவென கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதால் தீயை அணைப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு அருகே வசிக்கும் 18 வயது கோடி டான் கூறினார்.
தீ பரவியபோது வீட்டிலிருந்து அடர்ந்த கருப்புகை வெளியேறியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நபர் சொன்னார்.
தீயணைப்பு வாகனம், மருத்துவ அவசர உதவி வாகனம் ஆகியவற்றை சம்பவம் நடந்த இடத்தில் கண்டதாக ‘ஏசியாஒன்’ தெரிவித்தது.
அந்த ஊடகத்திடம் காண்பிக்கப்பட்ட காணொளிகளில், தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு அருகே இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகனப் பாதையிலிருந்து தீயைக் கட்டுப்படுத்தப் போராடுவதைக் காண முடிந்தது.
பாதிக்கப்பட்ட வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பொருள்களில் ஏற்பட்ட தீயை நீரைப் பீச்சியடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அக்கட்டத்திலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதாகவும் அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்த இருவர் தாங்களாகவே வெளியேறியதாகவும் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை என்றும் அது தெரிவித்தது.
