லிட்டில் இந்தியா நோரிஸ் ரோட்டில் கடைவீடு ஒன்றில் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) காலையில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
இந்தத் தீச்சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்திடச் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த சிலர் தங்கள் கருத்துகளை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
தீ விபத்து நிகழ்ந்த இடம் சற்று தூரத்தில் இருந்தாலும், அதனால் ஏற்பட்ட வெப்பத்தையும் அந்த புகையின் வாடையையும் தம்மால் மறக்க முடியாது என்றார் வீட்டுப் பணிப்பெண் திருவாட்டி விஜயலட்சுமி துரைலிங்கம், 45.
தமது விடுப்பு நாளை லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கழிக்க வந்திருந்த திருவாட்டி விஜயலட்சுமி, லிட்டில் இந்தியாவில் 31 நோரிஸ் ரோட்டில் அமைந்துள்ள ஒரு மளிகைக் கடையில் தாம் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது அதே தெருவில் அமைந்துள்ள மற்றொரு கடைவீட்டில் தீ மூண்டதாகக் கூறினார்.
“காவல் அதிகாரிகள் அடுத்த 10 நிமிடங்களுக்குள் அங்கு வந்துவிட்டனர். உடனடியாக அப்பகுதியிலும் அருகிலும் இருந்த அனைவரையும் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு சொன்னார்கள்,” என்று விவரித்தார் திருவாட்டி விஜயலட்சுமி.
“காவல் அதிகாரிகள் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, தீ மூண்ட கடையின் சன்னல்கள் உடைந்து கண்ணாடித் துண்டுகள் சிதறின,” என்று திருவாட்டி விஜயலட்சுமி மேலும் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் நீர்க்குழாய்களின் துணையுடன் தீயை அணைத்ததாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே விபத்து குறித்து தெரிவித்த திரு முனிராஜு முரளி, “தீ விபத்து நிகழ்ந்த இடம் நோரிஸ் ரோட்டில் அமைந்துள்ள ஓர் உடல் பராமரிப்பு நிலையம்,” என்றார்.
அருகிலுள்ள ஓர் அலுவலகத்தில் தம் பணியில் ஈடுபட்டிருந்த திரு முரளி, “அந்த நிலையத்தின் பணியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்,” என்று மேலும் கூறினார்.
தமது அலுவலகத்தின் சன்னல்களுக்கு வெளியே பேரளவில் புகை கிளம்பியதைத் தாம் கண்ட தருணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“சிறிதளவில் புகை வந்ததைப் பார்த்தபோது குளிர்சாதனப் பெட்டியில் ஏதோ பிரச்சினை என்று நான் நினைத்தேன். ஆனால் சற்று நேரத்தில் அந்தப் புகை அடங்காமல் அதிகப்படியானது,” என்றார் அவர்.
தமது மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலால் உதவி செய்வதற்காக தீ விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்த அவர், இச்சம்பவத்தை நேரடியாகக் கண்டு, தமது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் காணொளியாக உடனடியாகப் பதிவேற்றம் செய்தார்.
தீ விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சில கடைகள் தாண்டி அமைந்திருக்கும் ‘ஷரோக் கான் உணவகத்தை’ நடத்திவரும் திரு கான், தமது கடையிலிருந்த பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் இந்தச் சம்பவத்தால் உடனடியாக வெளியேற வேண்டியிருந்ததாகக் கூறினார்.
இதனால், அனைத்து உணவுப்பொருள்களையும் சமையல் செய்துகொண்டிருந்த வேலையையும் பாதியிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தச் சாலையில் இதுபோன்ற தீ விபத்து நிகழ்ந்ததை நினைவுகூர்ந்த அவர், இதனால் தமது வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்பதை நினைத்துச் சற்று வருத்தமடைவதாகவும் சொன்னார்.
மேற்கூறிய தீச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில், 31 நோரிஸ் ரோட்டில் அமைந்துள்ள ஓர் இரண்டு-மாடி கடைவீட்டில் காலை 11:15 மணியளவில் தீ மூண்டது குறித்துத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
தீயைக் கட்டுப்படுத்த மூன்று நீர்க்குழாய்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் ஒரு மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றைப் பாதுகாக்க, தீ பாதுகாப்புப் போர்வை ஒன்று அதன் மேல் விரிக்கப்பட்டது. இருப்பினும், அந்த வாகனமும் பக்கத்தில் அமைந்திருந்த கடைவீடுகளும் தீ, வெப்பம், புகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல்லடுக்கு ஏணியின் துணையுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மேலிருந்தவாறு நிலைமையைக் கண்காணித்து மதிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.