தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பற்றியதால் வெளியான புகையைச் சுவாசித்த ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பொத்தோங் பாசிர் அவென்யூ 1, புளோக் 132ல் புதன்கிழமை (அக்டோபர் 1) நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிற்பகல் 2.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் காரணமாக தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை கோடிகாட்டுவதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
முதலாம் தளத்தில் இருக்கும் அவ்வீட்டிலிருந்த ஆடவர் ஒருவர் வெளியேற்றப்பட்டு, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் தீப்பற்றியதாக 10 சம்பவங்கள் பதிவான நிலையில், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.