பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக்கழகக் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஏறத்தாழ 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இரவு 10.10 மணியளவில் ‘எட்ஜ்ஃபீல்ட் பிளைன்ஸ்’ வட்டாரத்திலுள்ள புளோக் 105Aல் தீ விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
15வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீ மூண்டதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட மின் கசிவு இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்றில், பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து சிதைவு ஒன்றின் பகுதி தரையில் விழுவதைக் காணமுடிந்தது.
நீர் பாய்ச்சும் கருவி ஒன்றின்வழி தீ அணைக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் வருவதற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட்டதாகவும் மேலும் கூறப்பட்டது
புகையைச் சுவாசித்ததற்காகப் பரிசோதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மின் செருகிகளில் அதிக அளவிலான மின் சாதனங்களை இணைக்க வேண்டாம் என்றும் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை அடைத்து வைக்க வேண்டும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், மின் கம்பிகளின் நிலையைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என்றும் தேய்ந்த அல்லது விரிசல் அடைந்த கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும் அல்லது பழுதுபார்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
