பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து அந்த புளோக்கில் வசிக்கும் சுமார் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சுமாங் லேனில் உள்ள புளோக் 224Aல் தீ மூண்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. பொங்கோல், செங்காங், தெம்பனிஸ் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் காலை ஐந்து மணியளவில் தீயணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அது குறிப்பிட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது புளோக்கின் ஏழாம் தளத்தில் உள்ள வீட்டிலிருந்து கறும்புகை வெளியானது தெரிந்தது. வீட்டின் படுக்கையறையில் மூண்ட தீ, குழாய் மூலம் நீர் பீய்ச்சியடித்து அணைக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்னரே நால்வர் அவ்வீட்டிலிருந்து வெளியேறினர். பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளில் வசிக்கும் சுமார் 60 பேரை காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.
புகையை நுகர்ந்த ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பந்தப்பட்ட வீட்டின் படுக்கையறையில் இருந்த மின்சாரப் பொருள் ஒன்றிலிருந்து தீ மூண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

