தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீராவிக் குளியலறை இருந்த வீட்டுக்கு வெளியே தீப்பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன

2 mins read
d4c5ee97-1b36-40f0-8f15-4ff0c84ef50c
நீராவிக் குளியலறை ஜூலை 11ஆம் தேதி அகற்றப்பட்டது. இருப்பினும், மற்ற தீப்பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிராங்கூன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றுக்கு வெளியிலிருந்து நீராவிக் குளியலறை அகற்றப்பட்ட பகுதியில் தீப்பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்த விதிமீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

நீராவிக் குளியலறையைக் காட்டும் படங்கள் முன்னதாக இணையத்தில் வலம் வந்தன. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வெளியில் மரத்தாலான பொருள்களை வைப்பது அனுமதிக்கப்படுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

நீராவிக் குளியலறையின் சொந்தக்காரர் மரின் பரேட் நகர மன்றத்தின் உதவியை நாடிய பிறகு, ஜூலை 11ஆம் தேதி அது அகற்றப்பட்டது.

பொதுமக்களின் கருத்துகளைத் தொடர்ந்து, சிராங்கூன் சென்ட்ரல் புளோக் 427ல், ஜூலை 11ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.

“சோதனையின்போது நீராவிக் குளியலறை அகற்றப்பட்டதைக் கண்டோம். இருப்பினும், வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்ட சில பொருள்கள் உட்பட மற்ற தீப்பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்றார் அவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஜூலை 11ஆம் தேதி அந்தப் பகுதிக்குச் சென்றபோது, மிதிவண்டிகளும் 40க்கும் மேற்பட்ட செடித் தொட்டிகளும் காணப்பட்டன.

மேல் விவரங்களுக்காக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நகர மன்றத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

கடுமையான விதிமீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு, பொருள்களை அகற்றிய பிறகு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை அகற்ற தவறுவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்