சிங்கப்பூர் குடியிருப்புக் கட்டடங்களில் தீப்பாதுகாப்பு பற்றி மறுஆய்வு

2 mins read
98df835c-82fa-4b17-b835-fb8739ff87cd
தீப்பாதுகாப்பு நடைமுறைகளை கட்டட உரிமையாளர்கள் உறுதிசெய்யுமாறு துணை அமைச்சர் கோ பெங் மிங் கேட்டுக் கொண்டுள்ளார். - படம்:: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தீப்பிடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க, சிங்கப்பூரில் குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பான விதிமுறைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்த மறுஆய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இதனை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங்கின் ‘வாங் ஃபக் கோர்ட்’ என்னும் உயர் கட்டடத்தில் மூண்ட தீயில் 161 பேர் உயிரிழந்தனர்.

அதுபோன்ற சம்பவம் சிங்கப்பூரில் நிகழாதிருக்க, இங்குள்ள குடியிருப்புக் கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் தீப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

உயர் கட்டடங்களில் தீப்பிடிக்கும்போது அதனைச் சமாளிக்க சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் ஆயத்த வலிமை உள்ளதா என்றும் அவர்களில் சிலர் கேட்டிருந்தனர்.

அவற்றுக்குப் பதிலளித்த திரு கோ, குடியிருப்புக் கட்டடங்களில் தீவிபத்தைத் தவிர்ப்பது தொடர்பான மறுஆய்வு நடந்துகொண்டு இருப்பதாகவும் கூடிய விரையில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

அவரது அந்த அறிவிப்பை வரவேற்ற தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், மறுஆய்வின் கண்டுபிடிப்புகளை கட்டடங்களுக்கான மேலாண்மைச் சட்டத்துடன் தமது அமைச்சு இணைக்கும் என்றார்.

தமது உரையைத் தொடர்ந்த திரு கோ, சிங்கப்பூரின் குடியிருப்புக் கட்டடங்களில் தீச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகச் சொன்னார்.

2024ஆம் ஆண்டு 968 தீச்சம்பவங்கள் நிகழ்ந்த வேளையில் கடந்த ஆண்டு அது 1,051க்கு அதிகரித்துவிட்டதாக அவர் கூறினார்.

ஆயினும், அதிகரித்து வரும் வீடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தீச்சம்பவம் விகிதம் சற்று குறைவு என்றார் திரு கோ.

கடந்த 2021ஆம் ஆண்டின் மொத்த வீடுகளின் எண்ணிக்கையோடு அப்போது ஏற்பட்ட தீச்சம்பவங்களின் சராசரியைக் கணக்கிடுகையில், அது 0.067 விழுக்காடு. 2025ஆம் ஆண்டு அந்த விகிதம் சற்று குறைந்து 0.065 விழுக்காடாகப் பதிவாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நடைமுறையில் உள்ள தீயணைப்புச் சட்டவிதிகளுக்கு ஏற்ப சிங்கப்பூரில் கட்டடங்கள் கட்டப்படுவதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்னர் செய்ய வேண்டிய முன்தடுப்பு ஏற்பாடுகள் அவற்றுள் அடங்கும் என்றும் திரு கோ தெரிவித்தார்.

மேலும், கட்டட உரிமையாளர்களும் நகரமன்றங்களும் மேலாண்மை அமைப்புகளும் தீப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்