சாய் சீ புளோக்கில் தீ: 7 பேருக்கு மருத்துவ உதவி

2 mins read
23717029-a95c-406e-9bda-12233934e59d
மின்தூக்கிக்கு மேலே அமைந்துள்ள இரண்டு வீடுகள் வெப்பத்தாலும் புகைக்கரியாலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: சாவ்பாவ்

சாய் சீ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் 13வது மாடியில் உள்ள மின்தூக்கிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தீ மூண்டதில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் எண் 52 சாய் சீ ஸ்திரீட்டில் தீ மூண்டது குறித்துப் பாய லேபார், சாங்கி தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்குத் தீயணைப்பாளர்கள் சென்றபோது தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் மின்தூக்கிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த வீட்டுப் பொருள்களும் எரிந்துகொண்டிருந்ததாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

மின்தூக்கிக்கு மேலே அமைந்துள்ள இரண்டு வீடுகள் வெப்பத்தாலும் புகைக்கரியாலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கிலிருந்து குடியிருப்பாளர்கள் 35 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மருத்துவ உதவி பெற்ற 7 பேரும் சிகிச்சை பெற மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதை நிராகரித்தனர்.

மின்தூக்கிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சில பொருள்களுக்கு அருகே ஊதுவத்திகளைக் கொளுத்தியதால் தீ மூண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீ மூண்டதில் ஒட்டுமொத்த புளோக்குக்குமான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான 66 வயது ஆடவர் தமது மனைவி வீட்டுக்கு வெளியே வழிபாட்டுக் காகிதங்களை எரித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.

“வழக்கமாக அவர் கீழே சென்றுதான் காகிதங்களை எரிப்பார் ஆனால் இன்று என்ன காரணமோ தெரியவில்லை. வீட்டுக்கு வெளியே எரித்தார். அவரைத் தடுத்து நிறுத்துவதற்குள் தாமதமாகிவிட்டது,” என்றார் அந்த ஆடவர்.

தீக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்