சீமெய் வட்டார வீட்டில் தீ: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சீமெய் வட்டார வீட்டில் தீ: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
7c8d896b-2623-4fe6-892f-bfd0ae6a6e52
சீமெய் ஸ்திரீட் புளோக் 153இல் இரண்டாம் தள வீடு ஒன்றில் தீ மூண்டது. - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

சீமெய் வட்டாரத்தின் கழக வீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து மருத்துவமனையில் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். தீச் சம்பவம் வெள்ளிக்கிழமை (மே 8) ஏற்பட்டது.

சீமெய் ஸ்திரீட்டின் புளோக் 153இல் பிற்பகல் 4.40 மணியளவில் தீ மூண்டது குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

புளோக்கின் இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டின் வரவேற்பு அறையில் மூண்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைக்க முயன்றனர்.

தீ மூண்ட வீட்டிலிருந்து அதிகாரிகள் வருவதற்கு முன்னரே மூவர் வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாகக் காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் கட்டடத்திலிருந்து கிட்டத்தட்ட 10 பேரை வெளியேற்றினர்.

வீட்டின் வரவேற்பு அறை முழுவதும் தீயில் கருகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டின் பிற பகுதிகள் வெப்பத்தாலும் புகையாலும் சேதமடைந்தன.

அண்டை வீட்டில் உள்ள ஒருவர் புகையைச் சுவாசித்ததாகக் கூறப்படுகிறது. அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

வரவேற்பு அறையில் மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த ‘பவர் பேங்’ சாதனம் தீ விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மின்னூட்டச் சாதனங்கள் போன்றவற்றை இரவு முழுவதும் அல்லது கண்காணிப்பு இன்றி மின்னூட்டம் செய்யவேண்டாம் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றதாகக் கூறிய ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான், ஆறு பூனைகள், ஒரு நாய், ஒரு முயல் ஆகியவையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்