சுவா சூ காங் வீவக வீட்டில் தீ: 20 பேர் வெளியேற்றம்

சுவா சூ காங் வீவக வீட்டில் தீ: 20 பேர் வெளியேற்றம்

படம்: டான் சீ லெங் ஃபேஸ்புக்

20 Nov 2026 - 9:04 pm

1 mins read

சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் ஏழாம் மாடியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) மதியம் நடந்த தீ விபத்தை அடுத்து அக்கட்டடத்தில் இருந்த 20 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஊடகங்களுக்கு விவரங்கள் வழங்கிய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, புளோக் 6, டெக் வை அவென்யூவில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பிற்பகல் 3.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பாதுகாப்புக் கருதி ஏறத்தாழ 20 பேரை அக்கட்டடத்தில் இருந்து வெளியேற்றினர். படுக்கையறையில் மூண்ட தீயைத் தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர்.

சம்பவ இடத்தில் கரும்புகையைச் சுவாசித்த ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் சீ லெங் தற்போது இந்தியாவுக்கு அதிகாரபூர்வப் பணிகளுக்காகச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து அவர் அங்கிருந்து ஆறுதல் தெரிவித்தார்.

தீயை அணைத்து மக்களை வெளியேற்ற உதவிய குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை, மக்கள் கழக உறுப்பினர்கள், குடியிருப்பாளர் தொடர்பு வலைத்தள அமைப்பினர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“தீ விபத்துக்கு எதிரான பாதுகாப்பு நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். சமூகத்தைப் பாதுகாப்பாக வைப்பதில் நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்