தெம்பனிஸ் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு தீயணைப்பாளர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தீயை அணைக்கப் போராடியபோது வெப்பத்தினால் அவருக்குக் களைப்பு ஏற்பட்டுவிட்டது. ஏறத்தாழ 100 குடியிருப்பாளர்கள் அந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 86, புளோக் 29ல் தீ சம்பவம் பற்றிய தகவல் அன்றைய தினம் இரவு 9.05 மணிக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை (எஸ்சிடிஎஃப்) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அக்கட்டடத்தின் 15ஆம் மாடியில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் நடந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லை.
தீயணைப்பாளர்கள் வீட்டின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து உள்ளே சென்று நீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர் என்று எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
தீ பெரும்பாலும் படுக்கை அறையைப் பாதித்துவிட்டது. விசாரணை தொடர்வதாக எஸ்சிடிஎஃப் கூறியுள்ளது.
வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, மெழுகுவத்தி போன்ற எரிகின்ற பொருள்களையும் பயன்பாட்டில் இல்லாத மின்சாதனங்களையும் அணைத்துவிட்டுச் செல்வதோடு, சமையலை பாதியில் விட்டுச் செல்வதைத் தவிர்க்கும்படியும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

