தெம்பனிஸ் வீட்டில் தீ; தீயணைப்பாளர் உட்பட இருவர் மருத்துவமனையில்

30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

தெம்பனிஸ் வீட்டில் தீ; தீயணைப்பாளர் உட்பட இருவர் மருத்துவமனையில்

2 mins read
7c5c3504-d48f-483d-b1bb-41309ab3a89a
தீயில் வீட்டின் கூரை, சன்னல், தளவாடங்கள் எரிந்துபோயுள்ளது. - படம்: ஷின் மின்

தெம்பனிசில் புதன்கிழமை (மே 20) விடியற்காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 30 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 34, புளோக் 366ல் உள்ள 10வது மாடி வீடொன்றில் காலை 5.35 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டின் வரவேற்பறை, சமையலறையை எங்கும் சூழ்ந்திருந்த தீ, இரண்டு நீர் பீச்சிகள் மூலம் அணைக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் அந்த வீட்டிலிருந்த இருவர் வெளியேறிய நிலையில், முன்னெச்சரிக்கையாக அண்டை வீடுகளைச் சேர்ந்த 30 பேர் வெளியேற்றப்பட்டனர்.

புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புக்காகப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீயணைப்புப் பணியின்போது வலது காலில் அசௌகரியத்தை உணர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்தில் பெரிய அளவில் எவருக்கும் பாதிப்பில்லை என்று தெம்பனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லீன் சென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நகர மன்றம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தெம்பனிஸ் ஈஸ்ட் சமூக மன்றம், தெம்பனிஸ் ஈஸ்ட் பகுதி 8 குடியிருப்பாளர் கட்டமைப்பின் அடித்தளத் தொண்டூழியர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி வருவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பின் புள்ளிவிவரப்படி, 2025ஆம் ஆண்டில் பதிவான மொத்தம் 2,050 தீ விபத்துகளில், 1,051 விபத்துகள் குடியிருப்பு சார்ந்தவை. கவனக்குறைவாகச் சமைப்பது, மின்சாரக் கோளாறுகள் விபத்துக்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்