தெலுக் பிளாங்காவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் சனிக்கிழமை (ஜனவரி 3) பிற்பகல் தீ மூண்டதைத் தொடர்ந்து, அந்த புளோக்கிலிருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 108 புக்கிட் பெர்மாய் சாலையில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 1.20 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
ஆறாவது மாடி வீட்டில் உள்ள படுக்கையறை ஒன்றில் தீ மூண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. புகை சூழ்ந்த அந்த வீட்டின் வாசல் கதவைப் பலவந்தமாக உடைத்து வீட்டிற்குள் புகுந்த தீயணைப்பு வீரர்கள், நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
படுக்கையறையில் தீ மூண்டபோது வீட்டில் எவரும் இல்லை. இதனால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை சொன்னது. படுக்கையறையினுள் தீ கட்டுக்குள் இருந்தது. படுக்கையறையில் இருந்த மின்சைக்கிளின் மின்கலனில் தீ மூண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

