தோ பாயோ வீட்டில் தீ; 61 வயது ஆடவரிடம் விசாரணை

தோ பாயோ வீட்டில் தீ; 61 வயது ஆடவரிடம் விசாரணை

படம்: ஷின் மின் நாளேடு

26 Oct 2026 - 7:06 pm

1 mins read

தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) தீ மூண்டது தொடர்பில் 61 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

புளோக் 170 லோரோங் 1ல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணியளவில் தீ மூண்டது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஓரறை வீவக வாடகை வீடுகளைக் கொண்டது என்று கழகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் நினைவோடு மீட்கப்பட்ட அந்த ஆடவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 10 பேர் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இரண்டாம் தள வீட்டின் படுக்கையறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. அதிகாரிகள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, தீயணைப்புக் கருவி மூலம் தீயை அணைத்தனர். தீ மூளும் அபாயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த ஆடவரிடம் விசாரணை நடப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த ஆடவர் கூச்சலிட்டதாகவும் தொப்பி ஒன்றை எட்டி உதைத்ததுடன் கண்ணாடிப் போத்தல்களைத் தரையில் வீசியதாகவும் அண்டை வீட்டுக்காரர் சீன நாளிதழான ஷின் மின் டெய்லியிடம் கூறினார். மேலும், அந்த வீட்டில் பத்து ஆண்டுகளுக்குமேல் வசித்துவரும் அந்த ஆடவர் நட்பானவர் என்றும் அண்டை வீட்டினருடன் சுமுகமாகப் பழகக்கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்