தோ பாயோ அடுக்குமாடி வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தீ மூண்டதை அடுத்து எழுவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு குழந்தையும் தீயணைப்பாளர் ஒருவரும் அடங்குவர் என்று பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் ஐவரும் தீயணைப்பாளர் ஒருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் திரு சக்தியாண்டி கூறினார்.
தோ பாயோ லோரோங் 8ல் உள்ள புளோக் 229ன் பத்தாவது மாடியில் அமைந்திருக்கும் வீட்டில் தீ மூண்டது குறித்துப் பிற்பகல் ஒரு மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இரண்டு மணி நேரம் கழித்து வெளியிட்ட பதிவில், பத்தாவது மாடி வீட்டில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பாளர்கள் 11வது மாடி வீடு ஒன்றில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியது.
பிற்பகல் 3.30 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குச் சேவை வழங்கினர். பின்னர் உயர்மாடி வீடுகளில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதைக் காணமுடிந்தது.
வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களில் சிலர், பத்தாவது மாடி வீட்டில் மூண்ட தீ பிறகு 11வது, 12வது மாடிகளுக்கும் பரவியதாகக் கூறினர்.
சம்பவ இடத்துக்குப் பிற்பகல் 2.20 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது தீயணைப்புப் படையினர் 11 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரும் அங்குக் காணப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தீ மூண்ட வீட்டின் மூன்று சன்னல்கள் வழியாக அடர்ந்த கரும்புகை வெளியேறுவதைக் காணமுடிந்தது. அதற்கு அருகிலுள்ள வீடுகளும் புகைக்கரியால் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.