அப்பர் சிராங்கூன் லோரோங் லூ லியான் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டில் செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 1) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 30 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் புளோக் 8 லோரோங் லூ லியானில் தீ விபத்து ஏற்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டனர். வரவேற்பறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்த நிலையில், நீர் பீய்ச்சியடித்துத் தீ அணைக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பு நடவடிக்கையின் போது வரவேற்பறையில் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
தீயணைப்பாளர்கள் அவரை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து, உடனடியாக முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியென் பெங், தமது தொகுதிக்கு உட்பட்ட வீடமைப்புப் புளோக்கில் தீ விபத்து ஏற்பட்டது குறித்துத் தமக்குத் தகவல் கிடைத்ததாக செப்டம்பர் 1ல் வெளியிட்ட முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
“இந்தத் தீ விபத்தில் குடியிருப்பாளர் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அண்மையில் கூட அவரைச் சந்தித்தேன்,” என்று அவர் கூறினார்.
“அவர் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தவர் மற்றும் இயல்பாகவே நட்பாகப் பழகக்கூடியவர் என்பதால், அவரது இழப்பு அனைவராலும் உணரப்படும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.”
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 28 முதல் குடியிருப்புத் தீ விபத்தில் ஏற்படும் ஐந்தாவது உயிரிழப்பாக இது உள்ளது


