தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்தியையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றிய தீமிதித் திருவிழா

3 mins read
4bab802c-87a1-4cea-ad40-d38715a7f9a4
சக்திக் கரகத்தைச் சுமந்தபடி மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கிய தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு. - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நிலைத்திருக்கும் பாரம்பரியங்களில் ஒன்றான ஶ்ரீ மாரியம்மன் கோயிலின் தீமிதித் திருவிழாவில் இவ்வாண்டு ஏறத்தாழ 4,000 பக்தர்கள் பங்கேற்றுப் பூக்குழி இறங்கினர்.

பக்தர்களுடன் கலாசார, சமூக, இளையர் துறைக்கான தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முத்தாய்ப்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) தீமிதித் திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் புடைசூழத் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று மாலை 6.15 மணியளவில் மாரியம்மன் கோயிலை அடைந்தார்.

மாரியம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் மேளதாள முழக்கத்துடன் சக்திக் கரகத்தைச் சுமந்து ஆடியபடி அவர் பூக்குழியைக் கடந்தார்.

பூக்குழி முன் அமர்த்தப்பட்ட உற்சவத் திருமூர்த்தங்கள்.
பூக்குழி முன் அமர்த்தப்பட்ட உற்சவத் திருமூர்த்தங்கள். - படம்: பே. கார்த்திகேயன்

பண்டாரத்தைத் தொடர்ந்து திரெளபதி அம்மன், கிரு‌ஷ்ணர், அர்ச்சுனன், வீரபத்திரர் ஆகியோரின் திருவுருவங்கள் முன்னிலையில் ஆண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

தீமிதி முடிந்தவுடன் பெண் பக்தர்கள் 750 பேர் பூக்குழியை வலம்வந்தனர்.

ஏறத்தாழ 1,000 தொண்டூழியர்களின் உதவியுடன் காலையிலிருந்தே இதற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கின. பூக்குழிக்காக 20,000 ‘பாக்கன்’ எனப்படும் காட்டு வேம்பு விறகுகள் தருவிக்கப்பட்டன.

18 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பூக்குழி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தயாரானது. பின்னர் காலை 9 மணியளவில் அது எரியூட்டப்படத் தொடங்கியது.

30க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள், எரிதழலை நீளமான கரண்டிகளைக் கொண்டு கிளறியபடி குழியைத் தயார்ப்படுத்தினர்.

மாலை 6 மணியளவில் பூக்குழியின் மீது ரோஜா இதழ்கள் தூவப்பட்டு, தூப தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்கள் இறங்குவதற்குப் பூக்குழி தயாரானது. பக்தர்கள் பூக்குழியைக் கடந்து பால் நிரப்பப்பட்ட குழியில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

மேலும் இவ்விழாவையொட்டி பால் குடம், மாவிளக்கு, பெண்களுக்கான கும்பிடுதண்டம், ஆண்களுக்கான அங்கப்பிரதட்சணம் ஆகிய நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றினர்.

தீமிதித் திருவிழாவையொட்டி நாள்முழுவதும் ஏறக்குறைய 10,000 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட திரு சேகரன் கிரு‌ஷ்ணன், 59, முதன்முறையாக இவ்வாண்டு பூக்குழி இறங்கினார். 

“தலைவராகப் பதவியேற்றவுடன் இறங்க எண்ணினேன். இந்த ஆண்டுதான் இறங்க முடிந்தது. தலைவர் பதவியில் இருக்கும்போது மக்களுடன் இணைந்து இறங்கியது சிறந்த அனுபவம்,” என்றார் அவர்.

அம்பாளின் திருவுருவம்
அம்பாளின் திருவுருவம் - படம்: பே. கார்த்திகேயன்

“70 நாள்களாக ஆயத்தப்பணிகள் நீடித்தன. பின்னர் திருநாளன்று காலை 4.30 மணிக்கே பணிகள் தொடங்கின. படுகளத்தைத் தொடர்ந்து 8 மணி நேரம் பூக்குழி தயாரானது. கரகம் நான்கு மணிக்குப் புறப்பட்டு 6 மணியளவில் வந்தடைந்தது. நேரம், வானிலை அனைத்தும் கைகொடுத்தன. நிறைவான அனுபவம்,” என்று திரு சேகரன் சொன்னார்.

“பூக்குழியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவிப் பணியில் ஈடுபட்டனர். கோயிலைச் சுற்றி 400 தொண்டூழியர்கள் சேவையாற்றினர்,” என்றார் அவர்.

சக்கர நாற்காலியில் வரும் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் எதிர்பாராத மருத்துவ உதவிகளுக்காகக் கோயிலுக்கு வெளியில் மருத்துவ உதவி மையமொன்றும் உள்ளே ஒரு மையமும் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார் திரு சேகரன்.

ஆறு வயது முதல் தீமிதித் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர் சிவரஞ்சனி ராதா, “தீமிதித் திருவிழாவே எனக்குத் தீபாவளி போலத்தான்,” என்றார். சொந்தங்களையும் நண்பர்களையும் இணைக்கும் இத்திருவிழா, தமது மகன் உட்பட அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என விரும்புவதாகவும் திருவாட்டி சிவரஞ்சனி கூறினார்.

குறிப்புச் சொற்கள்