ஈசூனில் தீ: 40 பேர் வெளியேற்றம்; நால்வர் மருத்துவமனையில்

2 mins read
77178755-b39a-4d82-b49f-4b8a74fb7b77
ஈசூன் புளோக் 475பி, 3வது மாடியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனால் தீ மூண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. - டாக்டர் சையட் ஹருண் அல்ஹப்ஷி/ ஃபேஸ்புக்

ஈசூனில் புதன்கிழமை (நவம்பர் 5) அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 40 பேர் தீ மூண்ட புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் தீ மூண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது, நான்கு மணி நேரத்திற்குள் நிகழ்ந்துள்ள இரண்டாவது தீச்சம்பவமாகும்.

இதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை இரவு (நவம்பர் 4) அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக்கில் தீச்சம்பவம் ஏற்பட்டது.

ஈசூன் சம்பவத்தில் ஸ்திரீட் 44ல் உள்ள புளோக் 475பி-யில் தீ மூண்டதாக அதிகாலை 2.25 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பாளகள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் 3வது மாடி வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் தீ ஏற்பட்டிருக்கலாம் என குடிமைத் தற்காப்புப் படை நம்புகிறது.

இதில் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்ட நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அங் மோ கியோ அவென்யூ 4, புளோக் 641ல் நிகழ்ந்த தீச்சம்பவத்திலும் நால்வர் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், சுமார் 200 பேர் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவமும் எட்டாவது மாடியில் மின்தூக்கிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குப் போலியான மின்கலன்களை வாங்கிப் பொருத்தவேண்டாம் என்று பொதுமக்களுக்கு குடிமைத் தற்காப்புப் படை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மின்கலன்களை இரவு முழுவதும் அல்லது நீண்ட நேரத்திற்கு மின்னூட்டம் செய்ய வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.

இவ்வாண்டின் முதல் பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பாக 20 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, 2024ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10 சம்பவம் அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்