ஈசூனில் உள்ள ஒரு கூட்டுரிமை அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் புதன்கிழமை (ஜூலை 29) கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டது. ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆர்க்கிட் பார்க் கூட்டூரிமை அடிக்குமாடிக் குடியிருப்பில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகத் தனக்கு அன்றிரவு 8.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கீழ்த்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இரண்டு தண்ணீர்க் குழாய்களைக் கொண்டு அணைத்தனர்.
புகையைச் சுவாசித்ததால் ஒருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கழகமும் அடித்தளத் தொண்டூழியர்களும் உதவி வழங்க முன்வந்ததாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹுய் யிங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறினார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கும் ஆதரவு வழங்கியதற்கும் குடிமைத் தற்காப்புப் படையினர், காவல்துறையினர், முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், குடியிருப்பாளர் ஒருவர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“அண்டைவீட்டார் பலரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

