கடல் சார்ந்த தீ விபத்துகளில் ஈடுபடும் தீயணைப்பாளர்களுக்கு இனி நில தீயணைப்பு நிலையத்திலிருந்து மூன்று மருத்துவ ஊழியர்களின் உதவி வழங்கப்படும்.
ஜூலை 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தற்காலிக நெறிமுறை, கடல் தீயணைப்பு நடவடிக்கைகளின் செயல்பாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஜூலை 16ஆம் தேதி தெரிவித்தது.
மே 16ஆம் தேதி ஒரு கப்பலில் நிகழ்ந்த தீயை அணைக்கும் முயற்சியில் மரணமடைந்த கேப்டன் கென்னத் டே சூ சின் தொடர்பான வழக்கின் ஆள் மறுஆய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கப்பல்களில் நிகழும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் தீயணைப்பாளர்களுக்கு உதவியாக மருத்துவ அதிகாரி ஒருவர், அவசரநிலை மருத்துவத் தொழில்நுட்பர்கள் இருவர் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து அனுப்பப்படுவார்கள்.
இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அவசரநிலை மருத்துவ உதவியாளர் ஒருவர் அருகில் உள்ள படகுத் துறைக்கு அனுப்பப்படுவார். கடல் சார்ந்த தீயணைக்கும் முயற்சியில் மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டால்தான் அவருக்கு சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
அவசரநிலை பராமரிப்புக்கு நான்கு நிலையிலான மருத்துவத் திறன்கள் உள்ளன என்று தெரிவித்த குடிமைத் தற்காப்புப் படை, முதலாவது நிலை, முதலில் சம்பவ இடத்துக்குச் செல்லும் முதலுதவி அதிகாரி; இரண்டாவது நிலை, அவசரநிலை மருத்துவத் தொழில்நுட்பர்கள்; மூன்றாவது நிலை, தொடக்கப் பராமரிப்பு மருத்துவ அதிகாரி; நான்காம் நிலை, மேல்நிலை பராமரிப்பு மருத்துவ அதிகாரி என்று விளக்கியது.
கடலில் தீயணைக்கும் பணியில் ஈடுபடும் தீயணைப்பாளர்கள், அவசரநிலை மருத்துவத் தொழில்நுட்பர்களாகவும் பயிற்சி பெற்றிருப்பர். அவர்கள் தங்களுடன் காற்றுப்பாதை மேலாண்மை சாதனங்கள், தானியங்கி வெளிப்புற சுவாசக் கருவி போன்றவற்றைக் கொண்டு செல்வர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது.
ஜூலை 2ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ பதில் அளித்த உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், அனைத்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தாங்கள் தீயணைப்பாளர்களாகப் பணியமர்த்தப்படுவதற்குத் தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கடல் சார்ந்த தீயணைப்பாளர்கள் நீச்சல், நீர் மீட்பு, நீர் உயிர்வாழ்வு, கப்பலில் தலையிடுவது, கடல் அறிவு கோட்பாட்டுச் சோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய கடல்சார் தீயணைப்பு நிபுணர் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,” என்றும் திரு சண்முகம் கூறினார்.

