தீயணைப்புப் பணிகளில் ஈடுபடும்போது தீயணைப்பாளர்கள் தனியாகச் செயல்படாமல் குறைந்தது இரண்டு பேர் கொண்ட குழுவாகச் செயல்பட வேண்டும்.
இந்த விதிமுறை தெரிந்தும் முழு நேர தேசிய சேவையாளர் ஒருவரைத் தனியாகத் தீயணைப்புப் பணியில் ஈடுபட அனுமதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மூத்த அதிகாரிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
39 வயது முகம்மது கமில் முகம்மது யாசினுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று புக்கிட் மேராவில் உள்ள புளோக் 91 ஹெண்டர்சன் சாலையில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கமிலுக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. அப்போது அவருடன் இணைந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 19 வயது எட்வர்ட் எச். கோவை அங்கேயே தனியாக விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் கமில்.
கோவின் முதுகில் தட்டி அவரிடம் தமது கட்டை விரலை கமில் காட்டி வீட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்து வெளியேறப்போவதாக கோவிடம் கமில் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கமில் வீட்டைவிட்டு வெளியேறியபோது தீ இன்னும் அணைக்கப்படவில்லை. அந்த வீட்டில் கோ தனியாக இருப்பதை கமில் மற்ற அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. பிறகு அந்த வீட்டின் சமையலறையில் கோ சுயநினைவின்றி மீட்கப்பட்டார்.
கோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக பிற்பகல் 2.15 மணிக்கு அறிவிக்கப்பட்டது. கண்மூடித்தனமாகச் செயல்பட்டு கோவுக்குக் காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஜனவரி 15ஆம் தேதியன்று கமில் ஒப்புக்கொண்டார்.
ஆனால், காவல்துறை கமிலிடம் முதலில் விசாரணை நடத்தியபோது அவர் ஒத்துழைக்கவில்லை. இரண்டாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான் நடந்ததை அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மரணம் அடைந்த கோவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதியன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் கோவின் குடும்பம் கலந்துகொண்டது.

