சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளில் உட்புறங்களிலும் அடுக்குமாடி கார் நிறுத்தகங்களிலும் பதிவான தீ விபத்துகளின் எண்ணிக்கை இருமடங்கையும் தாண்டிவிட்டது.
அந்தத் தீச்சம்பவங்களில் மின்சார வாகனங்கள் எதற்கும் தொடர்பில்லை.
அத்தகைய தீச்சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த 2020ஆம் ஆண்டில் 14, 2021ல் 12, 2022ல் 18, 2023ல் 27, 2024ல் 36 எனப் பதிவானது.
ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் புதன்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் பதிலளித்தபோது இவ்விவரங்களை வெளியிட்டார்.
இயந்திரப் பகுதிகள் அதிக வெப்பமடைதல், கார் நிறுத்தகங்களில் ஏற்பட்ட மின்பழுதுகள் போன்றவையே அத்தகைய தீச்சம்பவங்களுக்குக் காரணம் என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில் அத்தகைய தீச்சம்பவங்களின் எண்ணிக்கை கூடியதற்கு, வாகனங்கள் தீப்பற்றியது அதிகரித்ததே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரியில் அங் மோ கியோவிலுள்ள அடுக்குமாடி கார் நிறுத்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
அத்தகைய விபத்துகளைத் தடுப்பதற்கு, அனைத்து கார் நிறுத்தகங்களும் தீப்பாதுகாப்பு அம்சங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்றார் பேராசிரியர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களில் தீப்பற்றினால் அதனை அணைப்பது சற்றுக் கடினம் என்றும் அவர் சொன்னார்.
அதாவது, எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் தீப்பற்றினால் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் அணைத்துவிடலாம். மாறாக, மின்வாகனங்கள் தீப்பற்றி எரிந்தால் அதனை அணைக்க பல மணி நேரம் ஆகலாம் என்று பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
இந்நிலையில், மின்வாகன மின்னூட்டிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டினார்.
அத்தகைய தீச்சம்பவங்கள் ஏற்பட்டால் வீவக புளோக்குகளில் உள்ள தீயணைப்பான்களைப் பயன்படுத்தும்படி பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“ஆயினும், சில அம்சங்களில் கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய நேரங்களில் உடனடியாக 995 எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.