தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் அதிகமானோர் தீ விபத்துகளில் பலி; ஏஎம்டி சாதனங்களில் தீப்பற்றியதும் அதிகம்

2 mins read
2a4ddc3e-ac6c-4b9f-a257-765408302c1a
உந்து நடமாட்டச் சாதனங்களில் தீப்பிடித்த சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 67க்கு அதிகரித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த தீச்சம்பவங்களில் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

அத்துடன், துடிப்பாக நடமாடுவதற்கான உந்து நடமாட்டச் சாதனங்கள் (ஏஎம்டி - AMD) அதிகமாக தீ விபத்தில் சிக்கின. அவற்றில் பெரும்பாலானவை வீடுகளில் நிகழ்ந்தன.

இந்தத் தகவல்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்து உள்ளது.

2023ஆம் ஆண்டு 55 உந்து நடமாட்டச் சாதனங்களில் தீப்பற்றிய நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 21.8 விழுக்காடு அதிகரித்து 67 ஆனதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 13) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உந்து நடமாட்டச் சாதனங்களில் தீப்பற்றும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.

2022ஆம் ஆண்டு 42 உந்து நடமாட்டச் சாதன தீ விபத்துகள் நிகழ்ந்த வேளையில், அதற்கு அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை 31 விழுக்காடு அதிகரித்தது.

ஆயினும், 2019 முதல் 2022 வரை அத்தகைய தீச்சம்பவங்களின் எண்ணிக்கை நிலையாக இருந்தது.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் (PMDs), மின்சைக்கிள்கள் (PABs), தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்கள் (PMAs) போன்றவை துடிப்பாக நடமாடுவதற்கான சாதனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

அத்தகைய சாதனங்களில் தீப்பற்றுவது கவலைக்குரிய அம்சமாகத் தொடர்ந்து வருகிறது என்றும் குறிப்பாக, வீடுகளில் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அக்கறைக்குரியது என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

2023ஆம் ஆண்டு நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான ஒன்பது தீச்சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 44க்கு அதிகரித்தது.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் உருவாக்கப்பட்ட உந்து நடமாட்டச் சாதனங்களால் 2019ஆம் ஆண்டு முதல் ஆறு உயிரிழப்புகள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 22ஆம் தேதி தெரிவித்து இருந்தது.

தீ விபத்தில் சிக்கும் உந்து நடமாட்டச் சாதனங்களில் மின் சைக்கிள்களே அதிகம் என்று எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டுள்ளது.

நடமாட்டச் சாதனங்கள் உட்பட சிங்கப்பூர் முழுவதும் 2024ஆம் ஆண்டு நிகழ்ந்த தீச்சம்பவங்களில் ஐவர் உயிரிழந்ததாக அது தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மூன்றாக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்