தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் தொகுதி எஃப்-35 போர் விமானங்கள் 2026 இறுதியில் வந்துசேரும்: தற்காப்பு அமைச்சு

2 mins read
d0461da8-cacc-4877-805e-4a58337d41b4
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-35 விமான உற்பத்தி ஆலையில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கிற்கு (வலக்கோடி) எஃப்-35 திட்டம், அதன் ஆற்றல், தயாரிப்பு செயல்முறை குறித்து விளக்கப்படுகிறது. - படம்: லாக்ஹீட் மார்டின்

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படைக்கான முதல் தொகுதி எஃப்-35 போர் விமானங்கள், 2026 இறுதியில் வந்துசேரும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எஃப்-35ஏ, எஃப்-35பி, எஃப்-15எஸ்ஜி போர் விமானங்களைக் கொண்ட ஆகாயப்படையின் எதிர்காலப் போர் விமான வரிசைக்கு இந்த ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வலுச்சேர்க்கும் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தற்காப்பு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

சிங்கப்பூர் ஆகாயப்படை மொத்தம் 20 எஃப்-35 வகை போர் விமானங்களை வாங்கியுள்ளது.

2023 பிப்ரவரியில் தற்காப்பு அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, 12 எஃப்-35பி வகை விமானங்களை அமைச்சு வாங்கியதாக அப்போதைய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருந்தார். இந்த வகை விமானங்களால் குறுகிய ஓடுபாதைகளிலிருந்து புறப்படவும் ஹெலிகாப்டர்போல மேலே பறக்கவும் செங்குத்தாகத் தரையிறங்கவும் முடியும்.

இவற்றில் நான்கு விமானங்கள் 2026லும் மற்ற எட்டு விமானங்கள் 2028லும் வந்துசேரவுள்ளன.

இதற்கும் மேலாக, தற்காப்பு அமைச்சு எட்டு எஃப்-35ஏ வகை விமானங்களையும் வாங்கியுள்ளது. எஃப்-35பி விமானங்களின் 6,800 கிலோ ஆயுதச் சுமையுடன் ஒப்பிடுகையில், இந்த விமானங்கள் 8,160 கிலோ ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியவை.

எஃப்-35ஏ விமானங்களுக்கு அதிக எரிபொருள் கொள்ளளவும் உண்டு. இந்த விமானங்கள் 2030 வாக்கில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப்-15எஸ்ஜி வகை விமானங்கள் ஏற்கெனவே சிங்கப்பூர் ஆகாயப் படையிடம் உள்ளன.

இதற்கிடையே, தமது முதல் அதிகாரபூர்வ அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக, தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், டெக்சஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த்தில் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருகை புரிந்ததாக தற்காப்பு அமைச்சு கூறியது.

ஆகாப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் கெல்வின் ஃபானுடன் சென்ற திரு சானுக்கு இந்த வருகையின்போது எஃப்-35 திட்டம், அதன் ஆற்றல், தயாரிப்பு செயல்முறை குறித்து விளக்கப்பட்டது.

லாக்ஹீட் மார்டினின் எஃப்-35 விமான உற்பத்தி ஆலையில், தற்போது கட்டப்பட்டு வரும் சிங்கப்பூரின் முதல் எஃப்-35 போர் விமானத்தின் இறக்கையில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கையெழுத்திடுகிறார்.
லாக்ஹீட் மார்டினின் எஃப்-35 விமான உற்பத்தி ஆலையில், தற்போது கட்டப்பட்டு வரும் சிங்கப்பூரின் முதல் எஃப்-35 போர் விமானத்தின் இறக்கையில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கையெழுத்திடுகிறார். - படம்: லாக்ஹீட் மார்டின்

செப்டம்பர் 9 முதல் 13 வரை இடம்பெறும் தமது அமெரிக்கப் பயணத்தின்போது, திரு சான் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தைச் சந்தித்தார். மேலும், மற்ற அமெரிக்க அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

ஐடஹோவின் மவுண்டன் ஹோம் ஆகாயப் படைத் தளத்தில் ‘ஃபோர்ஜிங் சேபர்’ பயிற்சியில் பங்கேற்கும் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்