கேபோட்ஸ் எனப்படும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை வீட்டில் தயாரித்ததாக ஆடவர் ஒருவர் மீது வியாழக்கிழமை (ஜூலை 17) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சந்தேக நபரான முகம்மது அகில் அப்துல் ரஹிம் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஒருவர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது.
புகையிலை (விளம்பர, விற்பனைக் கட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் 41 வயது சிங்கப்பூரரான அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி ஈசூன் ஸ்திரீட் 22 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 269Bல் உள்ள ஒரு வீட்டில் அகிலிடம் மின்சிகரெட்டுகளும் அவை சம்பந்தப்பட்ட பொருள்களும் இருந்தது தெரியவந்தது. அகில், சொந்தமாகத் தயாரிக்கக்கூடிய கேப்போட்ஸ் மின்சிகரெட்டுகளைத் தயார்செய்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டால் அகிலுக்கு அனுகூலங்களை வழங்கத் தாங்கள் தயாராய் இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையத்தின் தரப்பில் வாதிடும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். காணொளிவழி நீதிமன்றத்தில் முன்னிலையான அகில், குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிவதாகவும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தனது சார்பில் வாதிட வழக்கறிஞரை நியமிக்க விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார். “நீதிமன்றத்தின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்றும் அகில் கூறினார்.
முன்னதாக எட்டோமிடேட்டை (etomidate) தன்வசம் வைத்திருந்ததாகவும் விற்றதாகவும் அகில் மீது நச்சு சட்டத்தின்கீழ் (poisons act) இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. எட்டோமிடேட், மின்சிகரெட்டுகளில் அதிகம் காணப்பட்டுவரும் கட்டுப்படுத்தப்பட்ட நச்சு வகையாகும்.
சென்ற ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு அகில், சம்பந்தப்பட்ட வீவக வீட்டுக்கு வெளியே 100 மின்சிகரெட்டுகளை விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மின்சிகரெட்டுகளில் 150 மில்லிலிட்டர் திரவம் இருந்தது. அந்த திரவத்தில் எட்டோமிடேட் இருந்தது சோதனையில் தெரியவந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் 12 அதிகாலை 5.30 மணியளவில் அதே இடத்தில் அகிலிடம் 26.4 கிராம் அளவிலான வெள்ளைப் பொடி இருந்ததாக நம்பப்படுகிறது. அந்தப் பொடியிலும் எட்டோமிடேட் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கேபோட் மின்சிகரெட்டுகள் கவலை தரும் விவகாரமாக உருவெடுத்துள்ளன.