தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசியாவில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் தலைவருக்கு அங்கீகாரம்

3 mins read
a77ad847-65fb-4fa8-8372-adb1d696536a
திருவாட்டி ஹலிமா விருது அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் தொடக்கவிழாவிற்கு வருகை புரிந்திருந்தார். - படம்: அனுஷா செல்வமணி

தென்கிழக்காசியாவில் இருக்கும் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை அங்கீகரிக்கும் விருது ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லினத்தில் நல்லிணக்கம் எனும் அந்த விருது, தென்கிழக்காசியப் பகுதியில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் தொடங்கப்பட்டுள்ளது.

தெமாசெக் அறநிறுவனம் ‘5G குளோபல் மூவ்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அந்த விருதை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தென்கிழக்காசியாவில் சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, தென்கிழக்காசியாவில் உள்ள சமூகங்களில் நல்லிணக்கத்தை வளர்ப்பதன் தாக்கத்தை அதிகரிக்க பல்வேறு கலாசார ஒத்துழைப்புகளை அதிகரிப்பது போன்றவை அந்த விருதின் முக்கிய நோக்கங்களாகும்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) பான் பசிபிக் ஹோட்டலில் விருதின் தொடக்கவிழா நடைபெற்றது.

விருதின் புரவலரும் சிங்கப்பூர் முன்னாள் அதிபருமான திருவாட்டி ஹலிமா யாக்கோப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் தொடக்கவிழாவிற்கு வருகை புரிந்திருந்தார்.

“பல்லினக் கலாசாரப் பின்புலன்களிலிருந்து வருவோருடன் நாம் பேசிப் பழகும்போது நம்மால் பல விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. நல்லிணக்கத்தை உருவாக்குவது எளிதானதன்று. தற்போது உலகில் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் நாம் ஒன்றுபட்டு இருப்பதுதான் மிக முக்கியம்,” என்று திருவாட்டி ஹலிமா தமது உரையில் வலியுறுத்தினார்.

எவ்வாறு ஒன்றுபட்டு இருப்பது என்பது பற்றிப் பேசிய அவர், ஒவ்வொருவரும் மற்றவர்களின் வேறுபாடுகளை முதலில் மதிக்க வேண்டும் என்றார்.

“வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்டாடுவதற்கான தளம் ஒன்று இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறருடன் உரையாட வேண்டும். உங்களுக்குப் பிடித்தவற்றை மற்றவர்களுடன் இணைந்து செய்யுங்கள். சுகாதாரப் பிரச்சினைகள், பருவநிலை மாற்றம், வறுமை போன்ற சவால்களைச் சமாளிக்க நாம் இணைந்து செயல்படவேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார் திருவாட்டி ஹலிமா.

சமூகம், தேசிய, வட்டார, அனைத்துலக அளவில் ஊக்கம் வாய்ந்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்ட திருவாட்டி ஹலிமா, அவர்கள் ஒன்றுசேர்ந்து சமூகப் பிணைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அப்பாற்பட்டு, வரும் தலைமுறையினரும் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று சொன்ன திருவாட்டி ஹலிமா, பொதுச் சேவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.

“நல்லிணக்கம், ஒற்றுமை சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதில் பொதுச் சேவை பெரிய பங்காற்றுகிறது. முன்னேறுவதற்கு நல்லிணக்கமும் அமைதியும் முக்கிய அடித்தளம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விருதுக்குத் தென்கிழக்காசியாவின் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்கள் சமூகங்களில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகத் தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகங்கள் அல்லது அரசாங்கங்கள் போன்றவற்றால் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் பொருத்தமான, புதுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மூலம் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டைக் காட்ட வேண்டும்.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் 20,000 அமெரிக்க டாலர் ரொக்கம், பல்லினத்தில் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் கோப்பை, அமைதியைக் கட்டியெழுப்புபவர்கள், சிந்தனைத் தலைவர்கள், பல துறைப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தங்கள் பணிகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவர்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு secretariat@5pglobal.org முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

குறிப்புச் சொற்கள்