ஜூலை மாதத்தில் எட்டு பிடிஓ திட்டங்கள் (தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள்) விற்பனைக்கு விடப்படும்.
அவற்றில் சீமெய் வட்டாரத்திலும் உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் வட்டாரத்திலும் கட்டப்படும் வீடுகளும் அடங்கும்.
சீமெய் வட்டாரத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்படுகின்றன.
உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் வட்டாரத்தில் இரண்டாவது வீவக வீடமைப்புத் திட்டம் கட்டப்படுகிறது.
வீவகவின் இந்த எட்டு பிடிஓ திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக, பல்வேறு வசதிகள், எம்ஆர்டி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள வீடுகளை வாங்க பலர் முன்வருவர் என்று அவர்கள் கூறினர்.
புதிய எட்டுத் திட்டங்களில் ஐந்து திட்டங்கள் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் உள்ளன.
அருகில் உள்ள எம்ஆர்டி நிலையங்களுக்கும் புதிதாகக் கட்டப்படும் வீடுகளுக்கும் இடையிலான தூரம் 600 மீட்டருக்குள் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதம் விற்பனைக்கு விடப்பட இருக்கும் புதிய பிடிஓ திட்டங்கள் தொடர்பான விவரங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டது.
புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 5,400 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
சீமெய் வட்டாரத்தில் கட்டப்படும் வீடுகளைத் தெம்பனிஸ் வட்டாரத்துக்கு உட்பட்டவையாக வீவக வகைப்படுத்தியுள்ளது.
அந்த வட்டாரத்தில் ஈரறை ஃபிளெக்சி வீடுகள், நாலறை வீடுகள், ஐந்தறை வீடுகள் என 384 வீடுகள் கட்டப்படுகின்றன.
சீமெய் சாலைக்கும் அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டுக்கும் இடைப்பட்டுள்ள நிலப்பகுதியில் இவ்வீடுகள் கட்டப்படும்.
அந்தக் குடியிருப்பு வட்டாரத்தில் உணவகங்கள், பேரங்காடி, கடைகள். பாலர் பள்ளி என பல்வேறு வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

