சிங்கப்பூர் இந்தியர்களை ஒன்றிணைத்த ‘இணை’யின் முதல் கருத்தரங்கு

சிங்கப்பூர் இந்தியர்களை ஒன்றிணைத்த ‘இணை’யின் முதல் கருத்தரங்கு

2 mins read
6c1195a4-8e79-409b-af88-54c92e6321e1
பல இந்திய அமைப்புகளைச் சேர்ந்தோர் ‘இணை’ குழுவின் முதல் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரின் இந்திய அடையாளத்தை வலுப்படுத்த அமைக்கப்பட்ட ‘இணை’ எனப்படும் இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவின் முதல் கருத்தரங்கு சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

கருத்தரங்கில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அமைப்புகளைப் பிரதிநிதித்து 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகமானோர் கலந்துகொண்டது மட்டுமன்றி, நற்பணிப் பேரவை, ‘ஆட்டம்’ போன்ற பல்வேறு இந்திய அமைப்புகள் தங்கள் கண்காட்சிக் கூடாரங்களை அமைப்பதற்கும் அது சிறந்த தளமாக விளங்கியது.

சனிக்கிழமை (ஏப்ரல் 25), ‘கிராண்ட் காப்த்தோர்ன் வாட்டர்ஃபிரன்ட்’ ஹோட்டலில் இடம்பெற்ற கருத்தரங்கிற்குச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் ஆகியோர் சிறப்பு வருகையளித்தனர்.

அமைப்புகள் தங்கள் சேவைகள், திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசென்று, தங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது இக்கருத்தரங்கு.

100 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ‘த கமலா கிளப்’ அமைப்பினர், கருத்தரங்கு மூலம் அவர்களின் அமைப்பைப் பற்றி பிறருக்கு அறிமுகப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு கிட்டியதாகக் கூறினர்.

“பல அமைப்புகளைப் பற்றி இக்கருத்தரங்கில் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுடன் இணைந்து இதில் பங்கேற்றதன் மூலம் எங்கள் அமைப்பின் நோக்கங்களை ஆழமாகத் தெரிவிக்க முடிந்தது,” என்றார் அமைப்பின் தலைவர் ஸ்மிதா வர்கண்டிவார், 55.

‘விதைகள்’ அமைப்பின் நிறுவனரும், மூத்த வழிநடத்துநராகவும் இருக்கும் ஜெயசுதா சமுத்திரன், 35, சென்றாண்டு ஆய்வுக் குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ‘இணை’ குழுவின் முதல் கருத்தரங்கிற்கும் வந்திருந்தார்.

“எனக்கு ‘இணை’ என்ற சொல் மிகவும் பிடித்துள்ளது. நமக்கு இளையர்களைத் தாண்டி கூடுதலான பெண் தலைவர்களும் தேவை. இளையர் தலைமைத்துவமும் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது சமூகத்தில் திறமையான தலைவர்கள் உருவாக முடியும்,” என்று கூறினார் ஜெயசுதா.

“அமைப்புகளில் இல்லாத இளையர்களும் இத்தகைய கருத்தரங்குகளில் கலந்துகொள்ள முன்வர வேண்டும். அவர்களையும் உள்ளடக்கிய பல வாய்ப்புகளை அமைக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கைச் சூழலாக இருந்தாலும் இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள் என்பதால் ‘இணை’ குழுவில் இளையர்களின் பங்கு அளப்பரியது,” என்றார் சிண்டா இளையர் மன்றச் செயற்குழு உறுப்பினர் ஷர்மிஸ்தா சிவராமகிருஷ்ணன், 32.

ஓம்கார் கலைக் கழகத்தின் நிறுவனர் ஸ்ரீதேவி சிவராஜசிங்கம், 54, இக்கருத்தரங்கு மூலம் பல அமைப்புகள் ஒரே தளத்தில் சந்தித்து, அறிமுகம் செய்துகொள்ள முடிந்ததாகச் சொன்னார்.

“கலைகள் மூலம் வசதி குறைந்த குடும்பங்களை எட்ட ‘இணை’ குழு நல்ல வழியமைக்கும் என்று நம்புகிறேன். பொருளியல் காரணங்களால் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பலர் கலைகள்மேல் ஆர்வம் காட்டுவதில்லை,” என்று கூறினார் ஸ்ரீதேவி.

குறிப்புச் சொற்கள்