ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: $28 பில்லியன் மதிப்பில் முதலீடுகளுக்கு ஒப்புதல்

முதலாவது ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் கூட்டம்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: $28 பில்லியன் மதிப்பில் முதலீடுகளுக்கு ஒப்புதல்

1 of 3
படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு
படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு

02 Nov 2026 - 6:07 pm

2 mins read

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்டங்கள், திறன் மேம்பாடு, வர்த்தகம், முதலீடு ஆகிய பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலாம் ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கரையோரப் பூந்தோட்டத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 2) நடந்த அக்கூட்டத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், தேசிய வளர்ச்சி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர், ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இருதரப்பு உத்வேகத்தைத் தக்கவைக்கவும் கூடுதல் வட்டார, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் 2027 முதலாம் காலாண்டில் கூட்டு முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்த மலேசியாவும் சிங்கப்பூரும் சந்திப்பில் இணக்கம் தெரிவித்தன.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான பெருந்திட்டம் சீராக வகுக்கப்பட்டு வருகிறதென்று அமைச்சர் சீயும் மலேசிய அமைச்சர் அக்மலும் தெரிவித்தனர்.

டிசம்பரில் நடைபெறவுள்ள வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்பில் இருநாட்டுப் பிரதமர்களும் அதை அதிகாரபூர்வமாக வெளியிடுவர் என்றும் அவர்கள் கூறினர்.

சென்ற ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜூன் வரை 88.83 பில்லியன் ரிங்கிட் (S$28.04 பி.) மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தொகையில் 40.3 பில்லியன் ரிங்கிட் ஏற்கெனவே திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் திரு அக்மல் கூறினார்.

சிங்கப்பூர் மட்டுமன்றி அனைத்துலக அளவிலும் பல்வேறு முதலீட்டாளர்கள் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

இருதரப்புப் பொருளியல் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு அப்பால், சிங்கப்பூர் அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் எல்லைக் கடந்த ஒருங்கிணைப்பு திட்டம் சிறந்த முன்மாதிரியாகத் திகழுமென அமைச்சர் அக்மல் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்குமான இணைப்புச் சேவைகள் மேம்பட்ட சிறு படகுச் சேவைகள் வாயிலாகவும் 2027 பிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் வழியாகவும் மேம்படும் என்று அமைச்சர் சீ உறுதியளித்தார்.

முதன்முறையாக நடைபெற்ற ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சரநிலைக் கூட்டம் இனிவரும் காலங்களில் மலேசிய மத்திய அரசு, ஜோகூர் மாநில அரசு, சிங்கப்பூர் அரசாங்கம் ஆகிய மூன்று அரசாங்கங்களும் எல்லை கடந்த திட்டங்களைச் செவ்வென வகுக்க துணைபுரியுமென அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்கான கூட்டு அமைச்சர் குழுவில் மலேசிவாயின் பொருளியல் அமைச்சரும் சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சரும் இணைத் தலைவர்களாகச் செயலாற்றுவர் என்று இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

குழுவில் மலேசிய முதலீட்டு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர், ஜோகூர் முதல்வர், சிங்கப்பூர் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரும் இடம்பெறுவர். தேவைக்கேற்ப கூடுதல் பிரதிநிதிகளும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மோசமாகிவரும் உலகளாவிய நிலையற்ற தன்மையில் ஒருமித்த சிந்தனை கொண்ட அண்டை நாடுகள் மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிசெய்வது ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் மக்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமென்று அமைச்சர் சீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்சிறப்புஅமைச்சர்நிலைக் கூட்டம்ஒத்துழைப்புஒருங்கிணைப்புதிறன் மேம்பாடு