முதன்முறையாக ‘கியா’ நிறுவனத்தின் மின்சார கார் ஒன்றின் பாகங்கள் சிங்கப்பூரில் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளன (assembled).
சிங்கப்பூரில் மட்டும் விற்கப்படும் இந்த கார் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. ‘கியா இவி5’ (Kia EV5) எனும் ஐந்து இருக்கைகள் உள்ள இந்த காரை சைக்கிள் & கேரியேஜ் நிறுவனம் விற்கிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த சிங்கப்பூர் வாகனக் கண்காட்சியில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த மின்சார காரின் பாகங்களை ஒன்றுசேர்க்க 200 ரோபோக்கள் தேவைப்பட்டன. அவ்வாறு காரை உருவாக்க ஏழு மணிநேரம் தேவைப்படும்.
‘கியா இவி5’ காரின் பாகங்களை ஒன்றுசேர்த்து சோதனையிடும் நடவடிக்கைகளில் 67 விழுக்காட்டு நடவடிக்கைகள் தானியக்க முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஹியுண்டாய் மோட்டார் குழுமப் புத்தாக்க நிலையத்தின் (எச்எம்ஜிஐஎஸ்) தலைமை நிர்வாகியான ஹியுன் சுங் பார்க் தெரிவித்தார். ஹியுண்டாய், கியா ஆகிய இரண்டும் தென்கொரியாவின் ஹியுண்டாய் குழுமத்துக்குச் சொந்தமானவை.
‘கியா இவி5’, ‘டெஸ்லா மாடல் 5’, ‘ஹியுண்டாய் ஐயோனிக் 5’ ஆகிய கார்களைவிட சற்று சிறியது. அதோடு, இந்த கார் மூன்று வடிவங்களில் விற்கப்படுகிறது.

