தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் (பிடிஓ) திட்டத்தின்கீழ் மவுண்ட் பிளசெண்ட்டில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்பட உள்ளன.
முதல் மவுண்ட் பிளசெண்ட் பிடிஓ திட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
இதில் ஏறத்தாழ 1,500 வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டப்படும் வீடுகளில் ஈரறை, மூவறை, நான்கறை வீடுகளுடன் வாடகை வீடுகளும் அடங்கும்.
ஒவ்வொரு குடியிருப்புக் கட்டடமும் 40 மாடிகளுக்கும் மேல் இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மெக்ரிட்சி நீர்த்தேக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள புதிய மவுண்ட் பிளசெண்ட குடியிருப்புப் பேட்டையில் உணவகம், பேரங்காடி, கடைகள் ஆகிய வசதிகள் செய்துத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பழைய காவல்துறைப் பயிற்சிக் கழகம் அமைந்திருந்த இடத்தில், ஆறு பிடிஓ திட்டங்களின்கீழ் ஏறத்தாழ 5,000 வீடுகள் கட்டப்படும்.
இந்தக் குடியிருப்புப் பேட்டையின் பரப்பளவு 33 ஹெக்டர் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களை ஈர்க்கக்கூடிய பிரதான வட்டாரங்களில், கட்டுப்படியான விலையில் வீவக வீடுகளைக் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.
இதன் ஒரு பகுதியாக மவுண்ட் பிளசெண்ட் பிடிஓ திட்டம் அமைகிறது என்றார் அவர்.
மவுண்ட் பிளசெண்ட் குடியிருப்புப் பேட்டைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி தாம்சன் சாலைக்கும் தீவு விரைவுச்சாலைக்கும் இடையே உள்ளது.
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பகுதியான தோ பாயோ வட்டாரத்துக்கு மிக அருகில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் வட்டாரம், 1998ஆம் ஆண்டிலிருந்து நகர மறுசீரமைப்புப் பெருந்திட்டத்தின்கீழ் குடியிருப்புப் பேட்டைக்கான இடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் பிளசெண்ட் குடியிருப்பாளர்களின் போக்குவரத்துத் தேவைகளை தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் எம்ஆர்டி நிலையம் பூர்த்தி செய்யும்.
மவுண்ட் பிளசெண்ட் பிடிஓ வீடுகள் தயாராகும் அதே காலகட்டத்தில் இந்த எம்ஆர்டி நிலையமும் இயங்க தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தோ பாயோ ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுக்கு அருகில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் குடியிருப்புப் பேட்டைக்கான கட்டுமானப் பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
மவுண்ட் பிளசெண்ட் குடியிருப்புப் பேட்டையில் பலதுறை மருந்தகம், நூலகம், பூங்கா, விளையாட்டு வசதிகள் ஆகியவை கட்டப்படும்.
இவ்வாண்டு 17 குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.